டாக்டர் கஃபீல்கான் விவகாரத்தில் பின்வாங்கிய கேரள அரசு!

டாக்டர். கஃபீல்கானை இப்போதைக்கு வர வேண்டாம் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டாக்டர் கஃபீல்கான் விவகாரத்தில் பின்வாங்கிய கேரள அரசு!

கேரளாவில், நிபா வைரஸ் பரவி உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில்கூட இருவருக்கு நிபா வைரஸ் பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  நிபா வைரஸ் பாதித்த கோழிக்கோட்டில் பணிபுரிய விரும்புவதாக, உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட டாக்டர். கஃபீல்கான் விருப்பம் தெரிவித்திருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோடு அரசு மருத்துவமனை டீனை அணுகி, தாங்கள் பணிபுரியலாம் என்று கஃபீல்கானுக்கு அனுமதி அளித்திருந்தார். கேரள அரசு அவருக்கு விமான டிக்கெட்டையும் அனுப்பிவைத்திருந்தது. 

டாக்டர் கஃபீல்கான்

டாக்டர். கஃபீல்கானுக்கு,  கேரளத்தில் மருத்துவராகப் பணிபுரிய அனுமதித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில், குழந்தைகள்  பலியான விவகாரத்தில் 9 மாதங்கள் சிறையில் இருந்தவரை அரசியல் உள்நோக்கத்தோடு கேரளாவுக்கு வரவழைப்பதாக, பினராயி அரசுமீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, கேரள அரசு கஃபீல்கானை தற்போதைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளது. 

இதுகுறித்து கஃபீல்கான், ''என் குடும்பத்தினர் என்னை கேரளாவுக்குச் செல்லவேண்டாமென்று தடுத்தார்கள். 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளீர்கள். இப்போதுதான் ஜாமீன் கிடைத்துள்ளது. கேரளா சென்று, உங்கள் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நாங்கள் என்ன செய்வோம் என்று சொல்லித் தடுத்தனர். 'என்னால் சில உயிர்களைக் காப்பற்ற முடியும் ' என்று கூறி, அவர்களிடத்தில் அனுமதி வாங்கினேன். கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து தற்போதைக்கு வர வேண்டாம் என்கிற தகவல் வந்துள்ளது. மீண்டும் அழைத்தால் நான் செல்வேன்'' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!