வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (25/05/2018)

கடைசி தொடர்பு:16:50 (25/05/2018)

``ஒரு கோடி ரூபாய் இல்லை... 33 லட்சம் தருகிறேன்"- கடத்தல் கும்பலிடமிருந்து அண்ணனை மீட்ட தம்பி

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஃபைனான்ஸியரை லோன் வாங்கித் தருவதாகக் கூறி, மர்மக் கும்பல் காரில் கடத்தியது. கடத்தல் கும்பலுக்கு ரூ.33 லட்சம் கொடுத்து, அண்ணனைத் தம்பி மீட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடத்தல்

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர், மோகன். இவரின் தம்பி கணேசன். இவர்கள் இருவரும் வடபழனியில் நிதிநிறுவனம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், இவர்களுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. பணத்தை ஏற்பாடுசெய்துதருவதாகக் கூறி, ஒருவர் மோகனிடம் அறிமுகமாகியுள்ளார். லோன் வாங்கித் தருவதாகக் கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் அந்த நபர் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், லோன் விஷயமாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று மோகனை அழைத்துக்கொண்டு, அந்த நபர் காரில் சென்றுள்ளார். அப்போது, அந்தக் காரில் இன்னும் சிலர் இருந்துள்ளனர். வடபழனியிலிருந்து புறப்பட்ட கார், சேலையூர் பகுதிக்குச் சென்றது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் கார் நிறுத்தப்பட்டது. பிறகு, மோகனை அந்தக் கடத்தல் கும்பல் மிரட்டத் தொடங்கியது.

மோகனிடமிருந்த செல்போனைப் பறித்தனர். பிறகு, `ஒரு கோடி ரூபாய் தரவில்லை என்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்' என்று கடத்தல் கும்பல் மிரட்டியது. இதனால் பயந்துபோன மோகன், தன்னுடைய தம்பி கணேசனுக்கு போன்செய்து, பணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். அப்போது, கடத்தல் கும்பல் கேட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இல்லை. தற்போதைக்கு 33 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கடத்தல் கும்பலிடம் பேரம் பேசியுள்ளார் கணேசன். அதற்கு சம்மதம் தெரிவித்த கடத்தல் கும்பலிடம் பணம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, மோகன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வடபழனி போலீஸ் நிலையத்தில் மோகன் புகார் கொடுத்தார். அதன்பேரில், கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மோகனைக் கடத்திய கும்பல்குறித்து விசாரித்துவருகிறோம். அவருக்கு லோன் வாங்கித் தருவதாகக் கூறிய நபர்மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவர்குறித்த விவரங்களைச் சேகரித்துள்ளோம். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இந்தக் கடத்தல் சம்பவம் நடந்தவுடன் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால், கடத்தல் கும்பலை உடனடியாகக் கைதுசெய்திருப்போம். பணம் கொடுத்து மீட்ட பிறகுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. செல்போன் டவர்மூலம் கடத்தல் கும்பலை நெருங்கிவிட்டோம். இதனால் அவர்களை விரைவில் கைதுசெய்வோம்" என்றனர்.