நெல்லை, கன்னியாகுமரிக்கு மட்டும் மீண்டும் இணைய சேவை - தமிழக அரசு அறிவிப்பு!

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதளச் சேவை முடக்கத்தை ரத்துசெய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக வதந்தி பரவிவருவதாகக் கூறி, அதைத் தடுக்கும் நடவடிக்கையாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 5 நாள்களுக்கு இணையதளச் சேவையை முடக்கி, தமிழக அரசு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. எனினும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி, அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தவண்ணம் இருந்தன. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இணையதள முடக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, மதியம் 3 மணிக்குள் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் இணையச் சேவை முடக்கத்தை ரத்துசெய்து, தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, இரு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், தூத்துக்குடியில் இணையச் சேவை முடக்கத்தை ரத்துசெய்வதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், இந்த முடக்கம் தொடர்ந்து இருக்கும் எனத் தெரிகிறது. எனினும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!