வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (25/05/2018)

கடைசி தொடர்பு:17:30 (25/05/2018)

117 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி..!

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் குமாரசாமி வெற்றிபெற்றுள்ளார். 

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட கர்நாடகத் தேர்தல் முடிவில், யாருக்கும் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக  பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதையடுத்து, குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. தந்தை தேவகவுடா, ஆலோசனையின்படி ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுகொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்க அழைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், போதிய பெரும்பான்மை இல்லை எனக் கூறி எடியூரப்பா பதவி விலகினார்.  அதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, பெங்களூரு விதானா சவுதானாவில் நடந்த விழாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் புடைசூழ, நேற்றுமுன்தினம் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். 

 குமாரசாமி பதவியேற்ற பிறகு, கர்நாடக சட்டப்பேரவை இன்று முதல்முறை கூடியது. அப்போது, சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் கே.ஆர். ரமேஷ்குமார் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். பின்னர், குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆனால், எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். எனினும், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 117 வாக்குக்கள் பெற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். முன்னதாக, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வுசெய்யப்பட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க