வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (25/05/2018)

கடைசி தொடர்பு:17:55 (25/05/2018)

`இதுவரை துப்பாக்கிச் சூட்டில் 53 பேர் காயம்' - நீதிமன்றத்தில் அரசு தகவல்!

தூத்துக்குடி கலவரத்தில், இதுவரை 53 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருவதாகவும், அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி கலவரம், துப்பாக்கிச் சூடு சம்பந்தமாகப் பல வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில்,  ``துப்பாக்கிச் சூடு, போலீஸ் தடியடியில் காயமுற்ற பொதுமக்களைத்  தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து, அரசு செலவில்  சிகிச்சையளிக்க வேண்டும்" என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல்செய்த பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

வழக்கு விசாரணையின்போது,  ``கலவரத்தில் மொத்தம் 53 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மேல் சிகிச்சைக்காக தற்போது ஒருவர் மட்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவுசெய்துகொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு மாலை ஆறு மணிக்கு  மீண்டும் விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க