வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (25/05/2018)

கடைசி தொடர்பு:22:03 (25/05/2018)

என்எல்சி-யில் 24 ஆண்டுகளாக வழங்கப்படாத பணி - வேலைக்காக சிறப்பு பூஜை செய்த ஊழியர்கள்!

என்எல்சி நிறுவனத்தில் அப்பரென்டீஸ் முடித்தவர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என சிவசுப்பிரமணியர் சாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார்கள். 

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ அப்பரென்டீஸ் முடித்தவர்கள், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்ளுக்கு சுமார் 24 ஆண்டுகளாகப் பணி வழங்கப்படவில்லை. இவர்கள்,  நிரந்தர பணி வழங்கக் கோரி மத்திய அரசு, தமிழக அரசு, அமைச்சர்கள், என்எல்சி சேர்மன் எனப்  பலருக்கு மனுக்கொடுத்தும் எவ்வித பலனும்  இல்லை. இதேபோல ஆர்ப்பாட்டம் , பேரணி, உண்ணாவிரதம், முற்றுகை எனப் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் அவர்களுக்கு உரிய வழி கிடைக்கவில்லை. எனினும், என்எல்சி நிறுவனத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான என்எல்சி சிஐடியூ, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியவை நிர்வாகத்துடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இந்நிலையில், என்எல்சி நிறுவனத்தில் அப்பரென்டீஸ் முடித்தவர்கள், நெய்வேலி வேலுடையான்பட்டியில் உள்ள சிவசுப்பிரமணியர் சாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார்கள். பூஜையில், என்எல்சி நிறுவனத்தில் உள்ள இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் நீண்ட ஆயுள் பெறவும், என்எல்சி நிறுவனம் மின் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தியில் அகில இந்திய அளவில் சாதனை புரிந்திடவும், தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தம் சிறப்பாக அமைந்திடவும், என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ அப்பரென்டீஸ் முடித்து 24 ஆண்டுகளாகப் பணி வழங்காமல் உள்ள அனைவருக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என வேண்டி  சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.