`ஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு' - கொதிக்கும் கிருஷ்ணசாமி!

ஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் சொல்லிய பின், கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``அறவழியில் கடந்த 100 நாள்களாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. காயம் அடைந்தவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க நான் வலியுறுத்தியுள்ளேன். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தாத வகையில் காவல்துறைக்கு விதிமுறைகள் விதிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பதற்றம் இல்லாமல் செயல்படும் வகையில் அரசு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மட்டுமில்லாமல் இதுபோன்ற நச்சுக் கழிவு  மற்றும் புகையை வெளியிடும் அனைத்து ஆலைகளையும் மூட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு போதாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை, கடந்த 2013-ல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசுக்குச் செலுத்திய ரூ.100 கோடி அபராதத்தில் இருந்து வழங்க வேண்டும். இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும் ஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!