அக்ரி கமாடிட்டி - இந்த வாரம் எப்படி இருக்கும்? | Agri commodity report for this week

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (25/05/2018)

கடைசி தொடர்பு:20:31 (25/05/2018)

அக்ரி கமாடிட்டி - இந்த வாரம் எப்படி இருக்கும்?

அக்ரி கமாடிட்டி:

மென்தா ஆயில்:

அக்ரி

மென்தா ஆயில், சந்தையில் இறங்குமுகமாகவே உள்ளது. டிசம்பர் 2017ல் தொடங்கிய இறக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மார்ச் 2018ல் சற்றே ஏறத் துவங்கி, மார்ச் 2018 முடிவில் அந்த ஏற்றமும் முடிவுக்குவந்தது. அதன்பின், மீண்டும் இறக்கம் .இன்றளவும் தொடரந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், சென்ற வார முடிவில் இதற்கான மாற்றம் நிகழ ஒரு வாய்ப்பிருப்பதைப்போல முடிந்துள்ளது. 

முந்தைய இதழில் சொன்னது... "மென்தா ஆயில், தற்போது 1280 என்ற எல்லையை ஆதரவாகக்கொண்டுள்ளது. மேலே 1340 தடைநிலை ஆகும். இதை உடைத்தால் நல்ல ஏற்றம் வரலாம்.'' 

மென்தா ஆயில், சென்ற வாரம் முழுவதும் நாம் கொடுத்திருந்த முக்கிய தடைநிலையான 1340ஐ தாண்ட முடியாமலே முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும், சென்ற வாரம் திங்கள் அன்று, ஒரு நல்ல ஏற்றத்திற்கான முயற்சி நடந்தது. காலை 1303 என்ற புள்ளியில் தொடங்கி, அதிகபட்சமாக 1343 வரை சென்று, பின் முடியும்போது 1314 என்ற புள்ளியில் முடிவடைந்தது. அடுத்த நாள் செவ்வாய் அன்று 1305 என்ற புள்ளியில் சற்றே இறங்கத் துவங்கி, பிறகு இறக்கம் வலிமையாக மாறி, குறைந்தபட்ச புள்ளியாக 1262 என்ற புள்ளியில் முடிவடைந்தது. நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலை உடைக்கப்பட்டது. அதன்பின், புதன் அன்று இறக்கம் தொடர்ந்தது. குறைந்தபட்ச புள்ளியாக 1239 வரை சென்றது. ஆனால், முடியும்போது 1249 என்ற புள்ளியில் முடிந்து, ஒரு டோஜி உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. இதனால், இதுவரை வந்த இறக்கத்திற்கு ஒரு முடிவைக் காட்டியுள்ளது என்று சொல்லலாம். டெக்னிக்கல் அனாலிசிஸ் அமைப்பில், குறிப்பாக இறக்கத்திற்குப் பிறகு டோஜி வந்தால், அந்த இறக்கம் முடிவுக்கு வரலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அடுத்த நாள் வியாழன் அன்று 1251 என்ற புள்ளியில் தொடங்கி, மிக வலிமையான ஏற்றத்தை உருவாக்கி 1299 என்ற புள்ளியைத் தொட்டது. இது ஒரு நாளில் நகர்ந்த ஒரு வலிமையான ஏற்றம். அடுத்த நாள், மென்தா ஆயில் இன்னும் வலிமையாக மாறி, ஒரு இடைவெளியுடன் ஏறத் தொடங்கியது. வெள்ளி அன்று 1318ல் தொடங்கிய பிறகு, உச்சமாக 1343 என்ற புள்ளியைத் தொட்டு, 1339 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. 

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் நன்கு இறங்கி, பின் ஏறி, கிட்டத்தட்ட முன்பு கொடுத்திருந்த தடைநிலையான 1340-க்கு அருகாமையில் முடிந்துள்ளது. இன்னும் இதுதான் தடைநிலை. கீழே முக்கிய ஆதரவு 1298 ஆகும். 

அக்ரி

காட்டன்:

காட்டன், அகண்ட பக்கவாட்டு நகர்வில் இருந்து வந்தது. இந்த நிலையில், சென்ற வாரம் இந்த பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையை உடைக்க முயற்சித்தது. ஆனால் அதில் தோல்வி அடைந்து, கீழ் நோக்கி இறங்கியது. இந்த இறக்கம் பலமானதாக இருந்தாலும், காளைகள் இறக்கத்தை மீட்டு எடுத்துள்ளார்கள். 

சென்ற வாரம் சொன்னது,‘’தற்போது 20620 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும், உடைத்தால் முக்கிய ஆதரவான 20350 வரை இறங்கலாம். மேலே 21000 என்பது மிக வலிமையான தடைநிலையாகும்.’’ 

காட்டன், சென்ற வாரம் திங்கள் அன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 21000 என்ற தடையை உடைத்து ஏறி, 21200 வரை சென்றது. ஆனால் முடியும்போது இறங்கி, 21030 என்ற புள்ளியில் முடிந்ததால், ஒரு டோஜி வகை உருவ அமைப்பைத் தோற்றுவித்தது. மென்தா ஆயில் இறங்கியபோது டோஜி தோன்றி ஏற்றத்துக்கு வழிவகுத்ததுபோன்று, காட்டன் நல்ல ஏற்றத்தின்போது டோஜியைத் தோற்றுவித்து இறக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. அதன்பின் செவ்வாய் அன்று மிக வலிமையான இறக்கம் நிகழ்ந்து, 20680 என்ற புள்ளியைத் தொட்டு, முடியும்போது 20770ல் முடிந்தது. இங்கும் நாம் கொடுத்திருந்த ஆதரவைச் சோதித்து, மேலே ஏறியது குறிப்பிடத்தக்கது. அதன் பின் மூன்று நாள்களும் வலிமையான ஏற்றத்தைக் காட்டியுள்ளது. 

இனி என்ன செய்யலாம்? 

காட்டன் உச்சத்தில் இருந்து இறங்கி, ஆங்கில எழுத்து U வைப்போல இறங்கி ஏறியுள்ளது. தற்போது 21200 என்பது முக்கிய தடைநிலை ஆகும். கீழே 20820 என்பது முக்கிய ஆதரவாக உள்ளது.

பிவட் டேபிள்:

அக்ரி

அக்ரி

 

 

 

 

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம்   www.ectra.in