'எனக்கு உயிர் கொடுத்த அரசு ஆஸ்பத்திரிக்கு உதவி செய்தது மகிழ்ச்சி'- 72 வயது முதியவர் பூரிப்பு | old man donates Artificial breathing machine for government hospital in thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (25/05/2018)

கடைசி தொடர்பு:21:28 (25/05/2018)

'எனக்கு உயிர் கொடுத்த அரசு ஆஸ்பத்திரிக்கு உதவி செய்தது மகிழ்ச்சி'- 72 வயது முதியவர் பூரிப்பு

தன்னைக் காப்பாற்றிய மருத்துவமனைக்கு, முதியவர் ஒருவர் அன்பளிப்பு வழங்கியுள்ள சம்பவம் திருவாரூரில் நிகழ்ந்துள்ளது. 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, கோவிலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (72 வயது) என்பவர், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கை மற்றும் கால்கள் செயலிழந்து அவதிப்பட்டுவந்தார். எனவே, அவரது உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, நான்கு நாள்கள் செயற்கை சுவாசம் அளித்துள்ளனர். ஆனால், இவருடைய உடம்பில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், மருத்துவமனை நிர்வாகத்தினர் இவரை 'வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூற,  ராஜேந்திரனின் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதா இல்லை வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவதா என்று குழம்பியவர்கள்  இறுதியில், திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

அங்கு, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மூன்று நாள்கள் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளித்துள்ளனர்.  அதன் பயனாக,  ராஜேந்திரன் இயற்கையாகச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். மேலும் ஒரு மாத காலம் பிஸியோதெரபி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால், இன்று ராஜேந்திரன் தானே நடந்துசெல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.  இதனால் மனம் மகிழ்ந்த அவர், தன்னைப்போல இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு வசதியாக இருக்கும் வண்ணம், தன்னுடைய சொந்தச் செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செயற்கை சுவாச உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

முதியவர்இதுபற்றி அவர் கூறும்போது, ``நான் தனியார் மருத்துவமனையில் நான்கு நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றதற்கே எங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் செலவு ஆயிடுச்சி. செலவானாலும் என்னோட உடம்பில் முன்னேற்றம் இல்லன்னு சொல்லி கூட்டிட்டுப் போகச் செல்லிடாங்க. அதனாலதான் என்னை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிச்சிருக்காங்க. இன்றைக்கு நான் எந்தச் செலவும் இல்லாமல் சிகிச்சை பெற்று, மீண்டும் உயிர் பெற்றுள்ளேன்.

எனக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர் கொடுத்த இந்த அரசு மருத்துவமனைக்கும், நிர்வாகத்திற்கும் ஏதாவது செய்யணும்னு நினைத்துதான் என்னைப்போன்ற நோயாளிகளின் உயிரைக் காக்கும் விதமாக, இன்று நான் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செயற்கை சுவாச உபகரணங்களை இந்த மருத்துவமனைக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன். எனக்கு உயிர் அளித்த இந்த மருத்துவமனைக்கு நான் அன்பளிப்பு அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,  ``முதல் முறையாக அன்பளிப்புமூலம் ஒரு நோயாளி நன்றி தெரிவித்திருப்பது, அரசு மருத்துவமனைகளின்  வளர்ச்சிக்கு உதவும்" என்றார்.