வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். 

கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, அவரைப் பார்த்துவந்தார். 

மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும், மருத்துவமனைக்குச் சென்று குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நலம் நன்கு தேறிவந்தது என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்று காலை அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது குருவின் உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளது தெரியவந்தது. இந்தச் சூழலில் தான், காடு வெட்டி குரு இறந்து விட்டதாக இரவு 8.35 மணியளவில் டாக்டர்கள்  அறிவித்தனர். இதனால் பா.ம.க தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். குருவின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயம்கொண்டத்துக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!