`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி

காடுவெட்டி குரு

``குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க, வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாவீரன் குரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். அவரது மறைவை நேரில் கண்டும், மாவீரன் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் மீது அளவில்லா அன்பு காட்டி, அக்கறை செலுத்தியவர்களில் குரு குறிப்பிடத்தக்கவர் ஆவார். எனது நலனில் அவர் காட்டிய அக்கறை அளவில்லாதது. என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களில் அவர் முக்கியமானவர். சுமார் 25 ஆண்டுகளாக என்னை மூத்த அண்ணனாக இருந்து வழி நடத்தினார். நானும் அவர் மீது மரியாதை கொண்டிருந்தேன். மாவீரன் குருவுக்கு இரண்டாவது முறையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை பெரும்பாலான நேரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலையை கவனித்து வந்தேன். உலகின் புகழ்பெற்ற நுரையீரல் மருத்துவ வல்லுநர்களை தொடர்புகொண்டு அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளை பெற்றேன். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர், நுரையீரல் மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றேன்.

காடுவெட்டி குரு- அன்புமணி

குருவுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு தீவிர மருத்துவம் அளித்து காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார்கள். அப்போது நானும் உடனிருந்தேன். ஆனால், சுமார் 45 நிமிடங்கள் கடுமையாக போராடியும் பலனின்றி குரு மரணமடைந்தார். எனது குடும்ப உறுப்பினர்களில் முக்கியமான எனது மூத்த சகோதரனை இழந்து துடித்துக்கொண்டிருக்கிறேன்.

அண்ணனை இழந்து நான் படும் வேதனைகள் அளவற்றவை. குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை அவருடன் இருந்து சிகிச்சைகளை கவனித்துக்கொண்டவன் என்ற முறையில் அவர் உடல் நலம் பெற்று இல்லம் திரும்புவார் என்று உறுதியாக நான் நம்பினேன். ஆனால், எதிர்பாராத அவரது இந்த மறைவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குருவின் மறைவுச் செய்தியை பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். எனது அதிர்ச்சி, வேதனை, சோகம் ஆகியவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க, வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!