விபத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூதாட்டி... உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்

விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிய மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியனுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் கடந்த 23-ம் தேதியிலிருந்து வருவாய்த் துறையின் ஆண்டுத் தணிக்கை (ஜமாபந்தி) நடைபெற்று வருகின்றது. அதில் வருவாய்த் துறையின் தீர்வாய அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று வருகிறார். அதன்படி நேற்று அந்த நிகழ்வை முடித்துவிட்டு மதியம் அங்கிருந்து கிளம்பிய அவர்  விழுப்புரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். 3.30 மணியளவில் அவரது கார் விழுப்புரம்-செஞ்சி சாலையில் அழகாபுரி என்ற கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று திடீரென்று நிலை தடுமாறி, அங்கே சாலையோரம் நின்று கொண்டிருந்த அழகம்மாள் (67) என்ற மூதாட்டி மீது மோதியது.

ஆட்சியர்

அதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி உயிருக்குப் போராடினார். பின்னால் வந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அந்தச் சம்பவத்தைப் பார்த்தவுடன் தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறி இறங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை போன் செய்து வரவழைக்க முயற்சி செய்தனர். ஆனால், அதுவரை காத்துக் கொண்டிருப்பது மூதாட்டியின் உயிருக்கு ஆபத்து என்று சொன்ன மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் உதவியுடன் அந்த மூதாட்டியை தனது காரில் ஏற்றிய கலெக்டர் சுப்பிரமணியன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார். அதோடு நிற்காமல் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரியான மருத்துவர் புகழேந்தியைத் தொடர்புகொண்டு, மூதாட்டிக்குத் தேவையான சிகிச்சைகளை செய்து காப்பாற்றும்படி கூறினார். அதன்படி அந்த மூதாட்டி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தகுந்த நேரத்தில் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!