வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (26/05/2018)

கடைசி தொடர்பு:14:10 (26/05/2018)

`கடலூர், வேலூர் வேண்டாம்; புழல் சிறையில் அடையுங்கள்' - வேல்முருகனின் விருப்பத்தை நிறைவேற்றிய நீதிபதி

உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியைத் தகர்த்த வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி விழுப்புரம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சலசலப்பில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர் அக்கட்சியின் தொண்டர்கள். அதையடுத்து, வேல்முருகன் உட்பட 14 பேர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது உளுந்தூர்பேட்டை போலீஸ். அதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் மற்றும் நகரச் செயலாளர் முரளி போன்றவர்களை அன்றே விடுதலை செய்த போலீஸ் 11 பேரை சிறையிலடைத்தது.  

போராட்டம்

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களை சந்திப்பதற்காகவும் நேற்றிரவு தூத்துக்குடி சென்றார் வேல்முருகன். ஆனால், விமான நிலையத்திலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீஸ், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி இல்லை என்று கூறியது. அதோடு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தகர்த்த வழக்கில் அவரைக் கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது போலீஸ். ஆனால், அங்கு இரண்டு நீதிபதிகளும் விடுப்பில் சென்றிருந்ததால் அங்கிருந்து திருக்கோவிலூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நீதிபதி பத்மாவதி முன்னிலையில் வேல்முருகனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, கடலூர் சிறைக்குச் செல்கிறீர்களாக என்று நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு வேல்முருகன், எனக்கு கடலூர் சிறை வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்னர் நீதிபதி, வேலூர் சிறைக்குச் செல்கிறீர்களா என்று கேட்க, வேலூர் வேண்டாம் புழல் சிறைக்குச் செல்கிறேன் என்று வேல்முருகன் கூறினார். இதையடுத்து, 15 நாளில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வேல்முருகனை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க