நடுரோட்டில் டி.டி.வி தினகரனும் வைகோவும் திடீர் சந்திப்பு..!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். 

வைகோ

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில் கடந்த இரண்டு நாள்களாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றார். மேலும் தனது சார்பில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கி வருகிறார்.

நெல்லை திருக்குறுங்குடியில் அமைந்துள்ள கடம்பூர் ஜமீன்தாருக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் (பண்ணைத் தோட்டம்) தங்கி இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று நெல்லையில் இருந்து திருக்குறுங்குடி கெஸ்ட் ஹவுஸுக்கு தினகரன் பயணமாகிக்கொண்டிருந்தார். அதேவேளையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் நாங்குநேரியில் நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நெல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, நாங்குநேரி நான்குவழிச்சாலை அருகே இருவரின் காரும் நிறுத்தப்பட்டு வைகோவும், தினகரனும் சந்தித்துப் பேசினர். சுமார் 10 நிமிடம் நீண்ட இந்தச் சந்திப்பில், இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டதோடு ஸ்டெர்லைட் விவகாரம், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்துப் பேசினர் என அவர்களது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இருவரின் சந்திப்பு தமிழக அரசியலில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!