`முதல்வர் பதில் சொல்வார்'- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கேள்வியால் அதிர்ந்த அமைச்சர்

துப்பாக்கி சூடு- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

``தூத்துக்குடி கலவரம் நடந்த இடத்துக்கு அமைச்சர்கள் யாரும் வராதது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் பதில் சொல்வார்கள்" என்று பத்திரிகையாளர்களிடம் ஜகா வாங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த,13 அப்பாவிகளின் உயிர் பறிபோனது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் அளவில் பெரும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அனைத்து அமைப்புகள் சார்பில் தமிழகம் தழுவிய கடை அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
``கரூர் மாவட்டத்தில் மொத்தம் 96 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 770 பள்ளி வாகனங்களில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 9 வாகனங்கள் இயக்கத் தகுதியில்லை என சம்பந்தப்பட்ட பள்ளி வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 150 வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. பள்ளிகள் திறப்பதற்குள் அனைத்து வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு, ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாமும் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் நிறைய பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. நேற்றுகூட ஒரு பேருந்துக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பேருந்து மீட்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, 20 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் தொடர்ந்து பேருந்துகளை சேதப்படுத்தி வருகிறார்கள்" என்றவரிடம் பத்திரிகையாளர்கள்,
 ``தமிழக அமைச்சர்கள் ஒருவர்கூட தூத்துக்குடி கலவர பகுதிக்குச் செல்லவில்லையே?" என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அமைச்சர், ``இதற்கு தமிழக முதல்வரும் துணை முதல்வரும் பதில் சொல்வார்கள்" என்று ஜகா வாங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!