ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட்! விசாரணையை முடுக்கிவிட்ட ஐசிசி | ICC begins investication into new corruption scandal involving SLC

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (26/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (26/05/2018)

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட்! விசாரணையை முடுக்கிவிட்ட ஐசிசி

இலங்கையின் காலே மைதான பராமரிப்பாளர்கள், சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆடுகளத்தை மாற்றியமைத்ததாக புகார் எழுந்துள்ளது. 

ஐசிசி

 

இதுதொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில், இலங்கையின் காலே மைதானப் பராமரிப்பாளர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆடுகளத்தை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை தொடங்கிவிட்டதாகவும், குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், `ஏற்கெனவே கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உறுப்பு நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது’ என ஐசிசி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், `கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையில் காலாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின்போது ஆடுகளம் மாற்றியமைக்கப்பட்டதாக அல் ஜசீரா ஆவணப் படத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக மைதான பராமரிப்பாளர்களுக்கு லஞ்சமாக ஒரு பெரிய தொகை ஸ்பாட் பிக்ஸிங் செய்யும் கும்பலால் வழங்கப்பட்டிருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 183 ரன்களிலும் ஆட்டமிழந்தது. இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்தியா - இலங்கை அணிகள் இடையில் அதே ஆண்டில் காலே மைதானத்தில் நடைபெற்ற போட்டி குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது. இந்த குற்றச்சாட்டால், வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையில் காலே மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என இலங்கைக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


[X] Close

[X] Close