வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (26/05/2018)

காடுவெட்டி குருவுக்கு அஞ்சலி... அரியலூர் மாவட்டத்தில் முழு கடையடைப்பு

காடுவெட்டி குரு

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் வந்துள்ள பா.ம.க பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 10.30 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் உள்ள குருவுக்குச் சொந்தமான இடத்தில் உடல்அடக்கம் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ.குரு என்கிற குருநாதன். வன்னியர் சங்கத்தலைவராகவும் இருந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

இதையடுத்து, குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்துக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. காடுவெட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் வந்துள்ள பா.ம.க பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 10.30 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் உள்ள மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள, குருவுக்குச் சொந்தமான இடத்தில் அவரின் உடல்அடக்கம் செய்யப்படுகிறது.

காடுவெட்டி குருவின் மறைவையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் வெளியூர் செல்ல பேருந்துநிலையத்துக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் பேருந்துகள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் அரியலூர் மாவட்டத்தில் 14 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன