வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (26/05/2018)

கடைசி தொடர்பு:17:02 (26/05/2018)

ஸ்டெர்லைட்... நெல்லையில் பேட்டியளித்தவர் தூத்துக்குடியில் கைது

ஸ்டெர்லைட் கைது

தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டுப் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும்நிலையில், அந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் பல அமைப்பினர் வரிசையாகக் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். 

தூத்துக்குடி போராட்டத்துக்கு ஆதரவாகப் போராடுபவரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கச் சென்றவருமான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 10 பேர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாகப் போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உத்திரம் போலீஸால் பிடித்துச் செல்லப்பட்டார். ஆழ்வார்திருநகரி போலீஸார் அவரைப் பிடித்துச்சென்றதாக மணத்தி மக்கள் தெரிவித்தனர். மூத்த குடிமகனான அவர், உடல்நலம் குன்றியநிலையில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பியநிலையில் போலீஸால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார். 

அந்த போலீஸ்நிலையத்துக்கு நாம் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டதற்கு, “ ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி விசாரிப்பதற்காகவே உத்திரத்தை எஸ்.ஐ. சிவலிங்கம் கூட்டிவந்தார். மேலிருந்து சொல்லியிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்டதாக இன்னும் பதியவில்லை. மாலையில் விட்டுவிடுவதாகத்தான் தகவல்” என்று காவல்பணியிலிருந்த அதிகாரி தெரிவித்தார். போலீஸின் பிடியிலுள்ள உத்திரம், நேற்று நெல்லையில் தூத்துக்குடி போராட்டம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.