`ட்ரம்ப் அறிவிப்பு எதிரொலி!’ - தென்கொரிய அதிபருடன் கிம் ஜாங் உன் ஆலோசனை

தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன்-னை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இரண்டாவது முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.   

தென்கொரிய அதிபருடன் கிம் ஜாங் உன்

Photo Credits: ANI

அணு ஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா மீது உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்திருந்தன. கொரியப் போருக்குப் பின்னர் தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கடந்துவந்த வடகொரியா, அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால், உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரியா, சமீபத்தில் சமாதானப் பேச்சுக்கு இறங்கி வந்தது. முதல்படியாக தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன்-னை அந்நாட்டு எல்லைக்கே சென்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.

தென்கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்திக்கவும் கிம் விருப்பம் தெரிவித்திருந்தார். கிம் ஜாங் உன்னின் அழைப்பை ஏற்று அவரைச் சந்திக்க ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. `உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக, அந்தச் சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம்’ என அந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக ட்ரம்ப் திடீரென அறிவித்தார். அதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``வடகொரியாவின் சார்பில் வந்த சமீபகால அறிக்கையில், விரோதப் போக்கும், கோபமும் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் சந்திப்பது நன்றாக இருக்காது. எனினும், பேச்சுவார்த்தை ரத்தாவது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது’’என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்தசூழலில், தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன்-னை, கிம்ஜாங் உன் மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பதாக தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா - வடகொரியா இடையிலான சந்திப்பை நடத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக இந்த சந்திப்பு நடத்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்-கிம் சந்திப்பை நடத்துவது குறித்து இருதரப்பிலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!