வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (27/05/2018)

கடைசி தொடர்பு:09:45 (27/05/2018)

பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைத்தால் இந்தியா மறுக்காது! உள்துறை அமைச்சர் ராஜ்நாத்

பேச்சுவார்த்தைக்குத் தயாராகி, அதற்கான முன்னெடுப்புகளை பாகிஸ்தான் எடுத்தால், இந்தியா அதை மறுக்காது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் மாதத்தை ஒட்டி அமைதி நடவடிக்கைகளில் இந்திய  பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்திய எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் நிலையைக் குறிவைத்து இந்திய எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்கி அழித்தனர். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டது. இதையடுத்து, தங்களைத் தொடர்புகொண்டு தாக்குதல் நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கேட்டுக்கொண்டதாகவும் இந்திய எல்லைப்பாதுகாப்புப் படை தெரிவித்தது. 

இந்தநிலையில், இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை பாகிஸ்தான் எடுத்தால் இந்தியா, அதற்கு மறுப்புத் தெரிவிக்காது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், `பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றால், நாம் ஏன் அதை மறுக்க வேண்டும். நமது அண்டை நாட்டுடன் நல்ல நட்பையே விரும்புகிறோம். ஆனால், பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். நமது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அந்த தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரமலான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கைகளை நாம் நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தோம். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார். ஆங்கில செய்தித் தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்