வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (27/05/2018)

கடைசி தொடர்பு:16:43 (27/05/2018)

`தூத்துக்குடியில் 144 தடை நீட்டிக்கப்படமாட்டாது' - இயல்புநிலை திரும்புவதால் ஆட்சியர் நடவடிக்கை!

தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு முடிந்தது. இயல்புநிலை திரும்பிவருவதால் தடை உத்தரவை நீட்டிக்கப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 22ம் தேதி தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களை கலைப்பதற்காகக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் 13 பேர்  உயிரிழந்தனர். சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொடூர முறையில் நடந்த இந்தத் தாக்குதலால் தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. 5 நாட்களுக்கும் மேலாகப் பதற்றம் நீட்டித்தது, 144 தடை உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். இந்தநிலையில் தான் தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வந்தது. தடை மேலும் நீட்டிக்கப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  `` கடந்த 6 நாட்களாக அமலில் இருந்த 144 உத்தரவு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பில்லை. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் 95 சதவிகிதம் இயல்புநிலை திரும்பியுள்ளது. முழுமையான வகையில் இயல்புநிலை திரும்பும் வகையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படமாட்டாது. எனத் தெரிவித்தார். முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதால் தூத்துக்குடிக்குக் காய்கறி வரத்துக்கள் அதிகமாகியுள்ளன. மேலும் பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க