வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (27/05/2018)

கடைசி தொடர்பு:10:58 (27/05/2018)

ஊட்டி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கர்நாடக சுற்றுலாப் பேருந்து! 4 பேர் உயிரிழப்பு

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள வனத்துறைச் சோதனை சாவடியை உரிய நேரத்தில் கடக்க முற்பட்ட கர்நாடக சுற்றுலாப் பேருந்து பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

ஊட்டி அருகே நடந்த சாலை விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

கர்நாடக மாநிலம், பெங்களூரு வித்யாராணியாபுரம் பகுதியில் இருந்து 31 சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்றில் நீலகிரி மாடட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பும் போது நேற்று இரவு சுமார் 8 மணியளவில், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தவளைமலை பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஓட்டுனர் பேருந்தை ஓரம்கட்ட முயன்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை  4 ஆக உயர்ந்தது. மேலும், 25க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலென்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள  வனத்துறைச் சோதனைச் சாவடி இரவு 9.00 மணிக்கு முடப்படும் என்பதால், அதை கடக்க அவசர அவசரமாக வானகத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது. இந்த வாரத்தில் ஊட்டி - கூடலூர் ரோட்டில் விபத்துக்கு உள்ளான 2வது, கர்நாடக சுற்றுலாப் பேருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 21ம் தேதி 9ம் மைல் என்ற பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை, ஆனால் பலர் படுகாயமடைந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க