`துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் எல்லையில்லாத வேதனை அதிகரித்தது' - சகாயம் ஐ.ஏ.எஸ்!

தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அறிந்து ``இரண்டு நாள்  ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்ல முடியாதவை'' என்று  வீடியோ பதிவின்மூலம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் சகாயம் ஐஏஎஸ்.  

சகாயம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டம் கடந்த 22-ம் தேதியன்று கலவரமாக மாறியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடியில் நடந்த இச்சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக சகாயம் ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், `தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இரண்டு நாளாக எனக்கு ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்ல முடியாதவை. எண்ணிப் பார்க்கிறேன் என் தமிழ் சமூகத்தில் இளம் பிள்ளைகள் 17 வயது 23 வயது என்று இந்த தமிழச் சமூகத்தில் வாழ்வாங்கு வாழவேண்டி பிள்ளைகள் இந்த துப்பாகிச்சூடு சம்பவத்தில் பலியாகியிருக்கிறார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்தது. 

அடிப்படையில் நான் சுதந்திர நாட்டின் குடிமகன். என் நாட்டினுடைய சக குடிமக்களின் துயரத்திலும் சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னைப் பொறுத்த வரைக்கும் என் தமிழ் சமூகத்தினுடைய அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்றைக்கும் எம் தார்மீக ஆதரவுண்டு எனத் தெரிவித்துக்கொள்கிறேன்' என வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!