வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (27/05/2018)

கடைசி தொடர்பு:12:02 (27/05/2018)

`ஸ்டெர்லைட் குறித்து பொதுவாக்கெடுப்பு வேண்டும்' - அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் தமிழ்மாந்தன்!

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது குறித்து மக்கள் கருத்து அறிவதற்கு தூத்துக்குடியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்மாந்தன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்  ``தூத்துக்குடி மாநகர் முழுவதும் போலீஸாரை குவித்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தித் துன்புறுத்தும் செயலை நிறுத்த வேண்டும். ஒருநபர் கமிஷன் என்ற பெயரில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனத்தைத் திரும்ப பெறவேண்டும். அதற்கு மாற்றாக, ஓய்வுபெற்ற நீதிபதிகளான சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகிய இருவரில் ஒருவரை நியமித்து விசாரணை ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட உடல்களை உடற்கூறாய்வு செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக உயிர்நீத்தவர்களின் லட்சியமான ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அதன்பின்னரே உடல்களை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கொலைக்குற்றத்துக்கு முழுமுதற்காரணமான எடப்பாடியின் அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இந்தக் படுகொலைக்கு திட்டமிட்ட முதல் குற்றவாளியான ஆட்சியர் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ்  மீதும், காவல்துறை அதிகாரிகளான டி.ஐ.ஜி கபில்குமார், சைலேந்திரகுமார் யாதவ், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மகேந்திரன், அருண் சக்திகுமார், ஏ.எஸ்.பி செல்வ நாகரத்தினம் மற்றும் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் ஆகியோர் மீதும் கொலைக்குற்றத்திற்குரிய சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். 

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் யார் என்று அறிந்து வழக்குப் பதிய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர் விநியோகமும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மறுபக்கம் மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும் தமிழக அரசிடம் இருந்தும் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் ஆலையைத் தொடங்குவோம் என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். எனவே அரசும், வேதாந்தா நிறுவனமும் மக்களின் விருப்பம் என்னவென்று அறிய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டுமா அல்லது நிரந்தரமாக மூடப்பட வேண்டுமா என்று தூத்துக்குடி வட்டாரத்தில் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேலும் கருத்துகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் வலியுறுத்தும் நீதிமன்றமும், அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க