`டெல்லி டூ மீரட்' 11 ஆயிரம் கோடி செலவில் உலகத்தரத்திலான நெடுஞ்சாலை திறப்பு!

தலைநகர் டெல்லியில் முதல் மீரட் வரை, ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில், போடப்பட்ட அதிநவீன புறநகர் நெடுஞ்சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

மோடி நெடுஞ்சாலை

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட் வரையில் இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையை அமைக்கக் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையை 17 மாதங்களில் ஆறு வழிச்சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கப்படும் சாலையில், உள்ளே செல்லும் வழியும் வெளியேறும் வழியும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சாலையில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள்  மற்றும் ஒவ்வொரு ஐந்நூறு மீட்டர் தூரத்துக்கும் மழைநீர் சேகரிப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலை வழியில் செல்லும் வாகனங்களின் எடையைச் சோதிக்கும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, வாகனங்களின் வேகத்தை கேமரா மூலம் கணக்கிட்டு, அதிவேகமாகச் செல்பவர்களுக்கு அபராத ரசீது வழங்கப்படும். சாலையில் பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது. 

சாலை நெடுஞ்சாலை

11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையில் இந்தியாவின் 36 நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியின் காற்று மாசு அளவைக் குறைக்கும் விதத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் சாலை நெடுக்கிலும் இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 

இந்த புதிய நெடுஞ்சாலையால் டெல்லி நகருக்குள் வரும் வாகனங்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லி நகரின் காற்று மாசு அளவு 27 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!