அடுத்த பொதுத்தேர்தலில் மாநில கட்சிகள்தான்  `கிங் மேக்கர்' - சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.கவை வீழ்த்தும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு

சமீபத்தில் நடந்த முடிந்த குமாரசாமி பதவியேற்பு விழா ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. அதற்குக் காரணம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டணி தான். பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியாவுடன் மாநிலக் கட்சித் தலைவர்களான அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், பினராயி விஜயன் என பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநிலத் தலைவர்களும் தவறாமல் மேடையேறினர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. காரணம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்க சென்றது தான். பாஜக எதிர்ப்பு என்ற பிரதான காரணத்தினாலே இவர்கள் காங்கிரஸுடன் மேடையில் கை கோர்த்தனர். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டுவரும் சந்திரசேகர ராவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் வியப்படைய வைத்தது. கிட்டத்தட்ட அடுத்த பொதுத்தேர்தலுக்கான கூட்டணி இது என அனைவரும் பேசத் தொடங்கினர். 

அதற்கு அச்சரமாகப் பதவியேற்பு விழா முடிந்தும் பேசிய குமாரசாமி இக்கூட்டணி பொதுத்தேர்தலுக்கும் தொடர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,  ``நான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தேன். காரணம் இது பொருளாதாரத்துக்கு நல்லது என நினைத்தேன். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகள் திவாலானது. வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வரலாற்றில் நம் நாட்டில் இந்த அளவுக்கு பண தட்டுப்பாடு வந்து பார்த்ததில்லை. வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் தான்  `கிங் மேக்கர்' ஆக இருக்கும். மாநில கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தும். வரும் பொதுத்தேர்தலில் பாஜக தோல்வியை ருசிக்கும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!