இப்படியும் ஒரு மருத்துவர்... மனிதநேயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு!

கடவுள்களின் மறுஉருவம் மருத்துவர்கள் என்ற வாக்கியத்துக்கு ஏற்ப, ஆதரவற்ற நிலையில் வீடு இல்லாமல் நடைபாதைகளில் வசிப்பவர்களுக்கும் கோயில்களில் பிச்சை எடுப்பவர்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் டாக்டர் அபிஜித் சோனவேன். 

மருத்துவர் -மருத்துவம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் அபிஜித். இவர், புனேவில் உள்ள கோயில்கள் மற்றும் வழிபாடு ஸ்தலங்களில் பிச்சை எடுத்துவரும் முதியவர்களுக்கும் ஊனமுற்றோர்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார். இவரின், மருத்துவ சேவையை அனைவரும் பாராட்டி வருகிறனர்.

இதுகுறித்து அபிஜித் கூறுகையில், `மருத்துவம் ஒரு புனிதமான தொழில். எனது தொழில் மூலம் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதனையடுத்து, பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் பிச்சை எடுத்துவரும் முதியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கலாம் என தீர்மானித்தேன். இதனால், தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புனே நகரில் உள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று, அங்குள்ள நடைபாதைகளில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறேன்' என்றார். 

கோயில்களில் மட்டுமல்லாமல் சாலைகளிலும் பிச்சை எடுப்பவர்களுக்கும், வீடு இல்லாமல் நடைபாதைகளில் வசிப்பவர்களுக்கும் அபிஜித் இலவசமாக மருத்துவம் பார்க்கிறார். மேலும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாகக் கொடுத்து வருகிறார். இதுமட்டுமின்றி, நோயாளிகளின் உடல்நிலைமை மோசமாக இருக்கும்போது அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்கிறார்.

அபிஜிதின் இந்த மனிதநேய சேவையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சமூகத்துக்கு தன்னால் முடிந்த சேவையை செய்து வரும் அபிஜித் `சோஹம் அறக்கட்டளை' என்ற டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார். பிச்சைக்காரர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் இவரை அப்பகுதி மக்கள்  `பிச்சைக்காரர்களுக்கான டாக்டர்` என அழைக்கின்றனர். மேலும், நல்ல உடல்நிலையில் இருந்து பிச்சை எடுப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கி உழைத்து வாழும்படி அறிவுறுத்தி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!