`துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தனியாக அறிக்கை' - களத்தில் இறங்கிய தமிழ் மீனவ கூட்டமைப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழ் மீனவ கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஜினி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் இரையாகியுள்ளனர். அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இயங்கும் தமிழ் மீனவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.ரஜினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ``தூத்துக்குடியில் இருந்து  காவல்துறையை வெளியேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். இறந்தவர்கள் குறித்து உண்மையான எண்ணிக்கை மற்றும் விவரங்கள் தெரிய வேண்டும். 

இரவு நேரங்களில் வீடுபுகுந்து மக்களைக் கைது செய்வதைக் கைவிட வேண்டும் போன்ற நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 6-ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி இதனை விசாரித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கிடையே 3 பேர் கொண்ட குழுவாக துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்களுக்கு சென்று தனியாக அறிக்கை தயார் செய்துவருகிறோம். காவல்துறை இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடம்பூர் ராஜு பெயரளவுக்கே பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இளைஞர் சந்தோஷ் ராஜ் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!