வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (27/05/2018)

கடைசி தொடர்பு:07:04 (28/05/2018)

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கான நிவாரணம் உயர்த்தி அறிவிப்பு - முதல்வர் நடவடிக்கை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை 22-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, நடந்த கலவரத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், எச்சரிக்கை செய்யப்பட்ட பின்பே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்றவாறு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தற்போது இந்த நிவாரண நிதியை உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க