வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/05/2018)

கடைசி தொடர்பு:20:00 (27/05/2018)

`அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்’ - போராடும் 'மக்கள் பாதை' அமைப்பினர்!

மக்கள் பாதை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அங்கு மக்களுக்கு எதிராக நடந்த காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து 5 நாள்களாக 'மக்கள் பாதை' அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இவர்களை போலீஸார் கைதும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள இடுகாட்டில், 'மக்கள் பாதை' அமைப்பை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கீதா பேசியபோது, "கடந்த 5 நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். எங்களது நோக்கம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதும், அப்பாவி மக்களைக் கொன்ற காவலர்களின் பதவி பறிக்கப்பட்டு, அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதே. அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே  இருப்போம். தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தூத்துக்குடிக்கு விடிவுகாலம் பிறக்கும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தர், "தூத்துக்குடியில் நடந்த இச்சம்பவம் ஒரு ஜனநாயகப் படுகொலை. இது சுதந்திர நாடா என்ற கேள்வி கூட எழுகிறது. இலங்கையில் கூட சிங்களவன்தான் தமிழர்களை சுட்டுக்கொன்றான். ஆனால் இங்கு தமிழன், தன் சொந்த இனத்தையே சுட்டு கொல்கிறான். இது இந்தியா, சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் 'ஜாலியன் வாலாபாக்' படுகொலை ஆகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த  உலக தமிழ் மக்களும் சாதி, மதம் பார்க்காமல் போராட வேண்டும். இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்ற நாம், இதிலும் வெற்றிபெற வேண்டும். இன்று மலேசியாவில் 'மக்கள் பாதை' இயக்கத்தின் சார்பாக ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடிக்கு விடிவு காலம் கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார்.