வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/05/2018)

கடைசி தொடர்பு:22:31 (27/05/2018)

`தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துரதிருஷ்டவசமானது’ - தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைத் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக  டி.ஜி.பி ராஜேந்திரன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கடந்த 22-ம் தேதியன்று கலவரமாக மாறியது. இதனால், போராட்டக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து இரண்டு நாள்கள் போராட்டக்காரர்கள்மீது துப்பாகிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஸ்டெர்லைட் கலவரத்தின்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை, தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் , `தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதியன்று நடந்த கலவரம் மற்றும் துப்பாகிச்சூடு துரதிருஷ்டவசமானது. இது, மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற கலவரங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, சூழ்நிலைக்கு ஏற்றபடி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள். தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கையின்படி குற்றம்சாட்டப்படும் காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியில் தற்போது அமைதி நிலை திரும்பி வருகிறது. மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்கள். இந்த நேரத்தில் காவல் துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும், அடுத்தடுத்து வரும் நாள்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து, தற்போது போடப்பட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்' என்றார்.