வெளியிடப்பட்ட நேரம்: 20:33 (27/05/2018)

கடைசி தொடர்பு:20:34 (27/05/2018)

`தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது!’ - எச்சரிக்கும் அரசு மருத்துவர் சங்கத் தலைவர்

தமிழகத்திலும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ அதிமான வாய்ப்புகள் இருப்பதாகவும்,அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவருமான டாக்டர்.கே.செந்தில்  தெரிவித்தார்.

 தமிழகத்திலும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ அதிமான வாய்ப்புகள் இருப்பதாகவும்,அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவருமான டாக்டர்.கே.செந்தில்  தெரிவித்தார்.

நிபா வைரஸ் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளதாக டாக்டர் தகவல்


 ராமநாதபுரத்தில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த டாக்டர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ''நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் அதிகமாக பரவும் வாய்ப்பு இருக்கிறது.நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகிட வேண்டும் என்ற விழிப்புஉணர்வு மக்களிடம் ஏற்படுத்திட வேண்டும். இதற்கான ரத்த பரிசோதனைகளை சென்னையில் உள்ள மையத்துக்கு அனுப்பி அதன் பின்னரே முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.மாவட்ட மருத்துவமனைகளிலேயே உடனுக்குடன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முக்கியமாக கைகளை முறையாக கழுவிட வேண்டியதும் அவசியமாகும்.வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகமானவர்கள் தமிழகத்துக்கு வந்து கொண்டிருப்பதால் அவர்கள் மூலமாக நிபா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவில் போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அறுவைச் சிகிச்சைகள் செய்வது தாமதமாகிறது.பின்தங்கிய மாவட்டமாக ராமநாதபுரம் இருந்து வருவதால், தமிழக அரசு விரைவில் மருத்துவக் கல்லூரியை தொடங்கிட வேண்டும் என சங்கத்தின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும்,போதுமான சிறப்பு மருத்துவர்களும் ராமநாதபுரத்தில் இருப்பதால் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்குமாறும் வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது 2 ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவரே உள்ளனர். இதை 1,200 மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்கும் வகையில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும்.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதேபோல சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடத்திலும்,குஜராத் 2வது இடத்திலும் இருக்கிறது. மகப்பேறு மருத்துவம்,பொது மருத்துவம் ஆகியனவற்றில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக போட்டியிடும் வகையில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. 

முடிமாற்று அறுவைச்சிகிச்சை செய்து கொண்டு சந்தோஷ் என்ற மருத்துவம் படித்து வந்த மாணவர் உயிரிழந்தார். இவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவருக்கு ஒரு ஆண்டும், மயக்கவியல் மருத்துவருக்கு 6 மாதமும் உரிமத்தை அரசு ரத்து செய்துள்ளது. இதை ரத்து செய்யுமாறு இருவரும் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் அரசின் இந்த நடவடிக்கை சரியானதே என்றும் சங்கத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். அலோபதி மருத்துவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 மணி நேர தொடர்பயிற்சியளிக்கப்பட இருப்பதை வரவேற்கிறோம்,மருத்துவத்துறையில் நவீன கருவிகள்,மருந்துகள் அதிகமாக வந்து விட்டதால் உயிரிழப்புகள் குறைந்து விட்டது'' என்றார். இச்சந்திப்பின் போது குழந்தைகள் மற்றும் மூளைநரம்பியல் பிரிவு தீவிர சிகிச்சை மருத்துவர் ஆர்.மலையரசு, அரசு மருத்துவர்கள் ஞானக்குமார், புகழேந்தி,முத்தரசு,கணேசமூர்த்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.