வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (27/05/2018)

கடைசி தொடர்பு:21:30 (27/05/2018)

`அச்சுறுத்தும் நிபா வைரஸ்’ - கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

நிபா வைரஸ்

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருந்தது வருகிறது. இதனால், மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத்துறையினர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு, அங்கு முகாமிட்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இதுவரையில், பழந்தின்னி வௌவால்கள் மூலம்தான் நிபா வைரஸ் பரவியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தேசிய விலங்குகள் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் 'நிபா வைரஸ் பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவவில்லை' என்று முதற்கட்ட ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. 

இந்நிலையில், கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளைஞர் எபின் (ebin) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுகாதரதுறை அதிகாரி, `இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 11 பேர் கோழிக்கோடு மற்றும் 3 பேர் மலப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். வைரஸ் பாதித்ததாகக் கருதப்பட்ட சிலரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், நிபா வைரஸ் தாக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது, 26 பேர் கண்காணிப்பில் உள்ளனர்' என்றார்.