`தூத்துக்குடி சம்பவத்தில் முழு விசாரணைக்குப் பிறகு ஏராளமான நிஜங்கள் வெளிவரும்!’ - ஜி.கே. வாசன் சூசகம் | GK Vasan speaks about thoothukudi Massacre

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (27/05/2018)

கடைசி தொடர்பு:10:17 (28/05/2018)

`தூத்துக்குடி சம்பவத்தில் முழு விசாரணைக்குப் பிறகு ஏராளமான நிஜங்கள் வெளிவரும்!’ - ஜி.கே. வாசன் சூசகம்

தூத்துக்குடி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு ஏராளமான நிஜங்கள் வெளிவரும் என த.மா.கா. தலைவர் வாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடி சம்பவம்குறித்து முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, ஏராளமான நிஜங்கள் வெளிவரும் என த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்தார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்

த.மா.கா தலைவர் வாசன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக குமரி மாவட்டம் வந்தார். அவர்,  நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, இன்னும் அங்கு சகஜ நிலை திரும்பவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த அப்பாவி மக்களின் சடலம்கூட வீடுகளுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் காவல்துறையின் தவறான செயல்களால், தமிழக அரசுமீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம்குறித்து முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, ஏராளமான நிஜங்கள் வெளிவரும். இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். முதல்வரோ அமைச்சர்களோ, நேரடியாக சம்பவ இடத்துக்கு வராத நிலையில், அரசுமீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். அரசின் அலட்சியப்போக்கு மற்றும் காவல்துறையின் தவறான அணுகுமுறை காரணமாக 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில், பிரதமர் தொடர்ந்து வாய்மூடி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குள் பெட்ரோலை கொண்டுவர வேண்டும். த.மா.கா விரைவில் தனிப் பெரும்பான்மையுடன் உருவெடுக்கும்" என்றார்.