வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (28/05/2018)

கடைசி தொடர்பு:08:47 (28/05/2018)

`நிபா வைரஸால் அச்சப்படும் மக்கள்!’ - கேரளாவில் வீழ்ச்சியடைந்த பழங்களின் விலை

கேரளா மாநிலத்தில், கடந்த ஒருவாரமாக நிபா வைரஸ் பீதி காரணமாக பழங்களின் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் பழ வியாபாரிகள். 

நிபா வைரஸ்

கடந்த ஒரு வாரமாக கேரளாவை நிபா வைரஸ் கடுமையாக அச்சுறுத்திவருகிறது. நிபா வைரஸுக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால், மக்களிடம் அதிகப்படியான அச்சம் காணப்படுகிறது. இந்த வைரஸ், ஒருவிதமான வௌவால்களால் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, வௌவால் உண்ட பழங்களை உண்ணுவதன் காரணமாக இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.  

இதனால், கேரளாவில் தற்போது பழங்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பழங்கள் பாதிவிலைக்கும் கீழே சென்றுவிட்டன. இதுதொடர்பாக பழ வியாபாரிகள் கூறுகையில், ”நிபா வைரஸ் காரணமாக, மாநிலத்தில் பழங்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோடை காலத்தில் பழங்கள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த முறை, விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பழங்களைச் சந்தை விலையில் இருந்து பாதிக்கும் குறைவாகத்தான் விற்கிறோம். ஆனால், மக்கள் பழங்களை வாங்க அச்சப்படுகிறார்கள்” என்கின்றனர். அதேபோன்று கேரளாவில் ஜூஸ் கடைகளிலும் கூட்டம் குறைவாகத்தான் உள்ளது. `நோய் வந்தால், பழங்களைத்தான் அதிகமாக சாப்பிடுவோம். ஆனால் இப்போது, ஒரு பழம்கூட சாப்பிட முடியவில்லை’ என வருத்தம் தெரிவிக்கின்றனர்.