மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் 6 பேரை காணவில்லை - ஒருங்கிணைப்பாளர் புகார்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த தூப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் கைது செய்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேரைக் காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மக்கள் அதிகாரம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், காவல்துறை பலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்தது. இது தொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் சி.ராஜூ, ”உசிலையைச் சேர்ந்த கோட்டையன், கோவில்பட்டி சரவணன், ஆலங்குளம் முருகன், திருநெல்வேலியைச் சேர்ந்த கலியலூர் ரஹ்மான், முகமது அனஸ், முகமது இர்ஷத் ஆகிய 6 பேரை கடந்த 25 -ம் தேதி காவல்துறை வீடு புகுந்து கைதுசெய்தது. கைதுசெய்த போலீசார், எந்த காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையோ, என்ன வழக்கிற்காகக் கைது செய்கிறார்கள் என்பதையோ, எங்கு கொண்டுசெல்கிறார்கள் என்பதையோ குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவில்லை. உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, தமக்கு ஏதும் தெரியாது என்று கை விரிக்கின்றனர். கைதுசெய்யப்பட்டால், முறையாகத் தகவல் தெரிவிக்க  வேண்டும் என்பதும் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் சட்ட நடைமுறையாகும். கடந்த 48 மணி நேரமாக இவர்களைக் காணவில்லை என்பதால், இவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம். இந்த 6 பேரின் கடத்தலுக்கு எதிராக நாளை (இன்று) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்ய இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!