வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (28/05/2018)

கடைசி தொடர்பு:07:26 (28/05/2018)

"Age is just a number"... சென்னை அணிகுறித்து கேப்டன் தோனி கூறியது என்ன?

நேற்று நடந்த இறுதிப்போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன்மூலம், 11-வது ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களம் கண்டதால், சென்னை அணிமீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம் அதைப் பூர்த்திசெய்திருக்கிறது சென்னை. இந்த ஆண்டு புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை அணியில், நிறையபேர் 30 வயதைக் கடந்தவர்கள். இதனால், 'வயதானவர்கள் அணி', 'அங்கிள்ஸ் அணி' என்றெல்லாம்கூட கிண்டல் செய்தனர். ஆனால், அத்தனையையும் கடந்து அசால்ட்டாக கோப்பையை வென்றிருக்கிறது தோனி படை.

ஐ.பி.எல் சாம்பியன்ஸ் -தோனி

 நேற்றைய போட்டி முடிந்ததும் கேப்டன் தோனியிடம், "சென்னை அணியில் 9 வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், "நாம் வயது பற்றியே அதிகம் பேசுகிறோம். ஆனால், அதைவிடவும் முக்கியம் ஒரு வீரரின் ஃபிட்னஸ்தான். அந்தக் கோணத்தில்தான் ஒரு வீரரை அணுக வேண்டும். ராயுடுவுக்கு வயது 33. ஆனால், களத்தில் அதனால் எந்த சிக்கலும் இல்லை. அவரால் சிறப்பாக ஃபீல்டிங் செய்யமுடியும். எனவே, வயதைவிடவும் ஃபிட்னஸ்தான் மிகவும் முக்கியம். களத்தில் மிகச்சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் விரும்புவார்கள். எனவே, ஒரு வீரர் எந்த வருடம் பிறந்தார், அவருக்கு 19 வயதா, 20 வயதா என்றெல்லாம் யோசிக்கவேண்டியதில்லை. களத்தில் துடிப்பாகச் செயல்பட முடியும் என்றால், அதுதான் அணிக்கு முக்கியம். 

அதே சமயம், இந்த விஷயத்தால் எங்கள் அணிக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும் நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். வாட்சன் போன்ற மூத்த வீரர்கள் ஃபீல்டிங் செய்யும்போது, ஒரு ரன்னைத் தடுப்பதற்காக டைவ் அடிக்க வேண்டியதிருந்தால், அதைத் தவிர்க்கச் சொல்லிவிடுவோம். காரணம், அதன்மூலம் அவருக்கு காயம்கூட ஏற்படலாம். பிராவோ, வாட்சன் போன்ற முக்கியமான பேட்ஸ்மேன்கள் காயத்தில் சிக்கிக்கொண்டால், அவர்களுக்கு மாற்றான காம்பினேஷனை மீண்டும் உருவாக்குவது கடினம். எனவே, Age is just a number-தான். நாம் ஃபிட்டாக இருக்கவேண்டியதுதான் மிகவும் முக்கியம்" என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க