வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (28/05/2018)

கடைசி தொடர்பு:10:01 (28/05/2018)

இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதிய கருணாநிதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 13

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதிய கருணாநிதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 13

காவிரி நதிநீர்ப் பேச்சுவார்த்தையில், தொடர்ந்து அடுத்தடுத்தத் தோல்விகளால் துவண்டுபோனது தமிழக அரசு. இதையடுத்து, ``மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சட்டம் 1956 பிரிவு 3-இன்படி இரு மாநில நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் அப்போதைய தி.மு.க. அரசு முன்வைத்தது. 

காவிரி

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

மத்திய அரசு நிராகரிப்பு!

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தீர்ப்பாயம் அமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்’ என்று தமிழக அரசின் சார்பில் அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்டது. ``தீர்ப்பாயம் அமைப்பதை கர்நாடகம் ஏற்கவில்லை” எனக் காரணம் சொல்லி, அந்தக் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு. மேலும், ``இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் மட்டுமே தீர்ப்பாயம் அமைக்க முடியும்” எனச் சட்டத்தையும் சுட்டிக்காட்டியது. ``கர்நாடக அரசின் சம்மதத்துடன்தான் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றால், அது எந்தக் காலத்திலும் நடக்காது” என்றனர் தமிழக அரசியல் தலைவர்கள்.

பேச்சுவார்த்தையில் இணைந்த கேரளா!

உண்மையைச் சொல்லப்போனால், பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழகத்தில் அப்போது இருந்த தி.மு.க. ஆட்சியைவிட, கர்நாடகாவில் இருந்த அவருடைய காங்கிரஸ் கட்சிதான் கண்ணுக்குத் தெரிந்தது. அதனால்தான், காவிரிக்கான நீதி செத்துப்போனது; காவிரிக்கான துரோகம் மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மூலமே ஆரம்பமானது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, காவிரிக்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. 1970-ல் மட்டும் ஏப்ரல் - 17, மே - 16, அக்டோபர் 12 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தியது. 1970 அக்டோபர் 12 வரை இரண்டு மாநிலங்கள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், 1970 அக்டோபர் 27-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், ``காவிரி நீரில் எங்களுக்கும் உரிமை உண்டு” என்ற தார்மீக அடிப்படையில் கேரளாவும் அதில் கலந்துகொண்டது. கேரளத்தின் சார்பில் அப்போதைய முதல்வர் ஈ.எம்.சங்கரன் என்கிற ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் பங்கேற்றார்.

காவிரி

இந்திரா காந்திக்குக் கடிதம்!

அந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, கர்நாடகாவில் உள்ள கபினி, ஹேமாவதி நீர்த்தேக்கங்கள் குறித்துப் பேசப்பட்டன. ஆனாலும், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.லட்சுமண ராவ், ``பேச்சுவார்த்தையின் முடிவில் மைசூரும் தமிழ்நாடும் எடுத்துள்ள முழுக்க முழுக்க நேரெதிரான நிலைகளைக் காணும்போது, தீர்வு சாத்தியமானதாகத் தெரியவில்லை” என்றார். மேலும், ``இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன என அமைச்சரவையிடம் தெரிவிக்கப்போகிறேன்” என்று கூறினார். இப்படிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் எந்த முடிவும் ஏற்படாததால், தமிழக அரசு 1970 டிசம்பர் மாதம், பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் ஒன்றை எழுதியது. இதுகுறித்து அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய கடிதத்தில், “இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் எல்லாமே பலனற்றுப் போய்விட்ட நிலையில், பிரச்னையைத் தீர்க்க ஏதுவாக, மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் இந்திரா காந்தி, ``1971 மார்ச்சில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தீர்ப்பாயம் குறித்த எவ்வித முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை” என்றார். 

உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழகம்!

இந்த நிலையில், பிரதமர் இந்திரா காந்தி 1971 நாடாளுமன்றத் தேர்தலின்போது பெங்களூருவில், ``காவிரி நதிநீர்ப் பிரச்னை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விடப்படும்” என்று பகிரங்கமாக அறிவித்தார். இதற்கிடையே காங்கிரஸும், தி.மு.க-வும் கூட்டணிவைத்து தேர்தலில் களமிறங்கின. அவர்கள் கூட்டணி அமோக வெற்றிபெற்று டெல்லியில் இந்திராவும், தமிழகத்தில் மு.கருணாநிதியும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தனர். இப்படி மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்ததையடுத்து, காவிரி தீர்ப்பாயம் கோரி மீண்டும் இரண்டு கடிதங்களை எழுதினார் மு.கருணாநிதி. ஒருகட்டத்தில், காவிரிப் பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது. நடுவர் மன்றம் மூலம்தான் தீர்க்க முடியும் என்பதை மத்திய அரசு நன்றாக உணர்ந்திருந்தாலும், அதைப் பெரிதுபடுத்தவும் இல்லை; மு.கருணாநிதியின் கடிதங்களுக்குப் பதில் எழுதவும் இல்லை; அத்துடன், காவிரி நடுவர் மன்றத்தை, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவாச் சட்டம் பிரிவு 4(1)-இன் கீழ் மத்திய அரசு அமைக்கவும் இல்லை. மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

காவிரி

தஞ்சாவூர் விவசாயிகள் மனு!

``தீர்ப்பாயம் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும்; கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கும் கபினி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி, ஹேரங்கி உள்ளிட்ட புதிய அணைக்கட்டுகளின் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் 1971 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் விவசாயிகள் சார்பில் மன்னை நாராயணசாமி (தி.மு.க. மூத்த தலைவர்), முரசொலி மாறன் (முன்னாள் மத்திய அமைச்சர்), கருப்பையா மூப்பனார் (காங்கிரஸ் மூத்த தலைவர்) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். 

இதே காலகட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. ``தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்; கர்நாடகம் மற்றும் தமிழகம் மேற்கொள்ளவிருக்கும் புதிய அணைக்கட்டுத் திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும்” என அது கோரிக்கை வைத்து வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து பலரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``கர்நாடக அரசு கட்டவிருக்கும் புதிய நீர்த்தேக்கங்களால், தமிழகத்துக்கு எந்த அளவுக்குச் சேதம் ஏற்படும் என்பதை நிரூபிப்பது சாத்தியமில்லை என்பதால், அந்தத் திட்டங்களுக்குத் தடைபோட முடியாது” என்றது. இது, தமிழகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும், தீர்ப்புக் கோரிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் நீடித்தது.

- காவிரி பாயும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்