வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (28/05/2018)

கடைசி தொடர்பு:09:42 (28/05/2018)

வைகாசி விசாகம்... திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

வைகாசி விசாகம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. 

 இந்த ஆண்டுக்கான வைகாசி வசந்தத் திருவிழா, கடந்த 9 நாள்களாக நடைபெற்றுவருகிறது. 10-வது நாளான இன்று, வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த நாள்களில், தினமும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, கிரிவல உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

வைகாசி விசாகப் பெருந்திருவிழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிசேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 6 மணிக்கு முனிக்குமாரர்களுக்கு சுவாமி ஜெயந்திநாதர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறும். 

வைகாசி விசாகம்

வைகாசி விசாகப் பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் மாலை அணிந்தும், விரதமிருந்தும் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க