``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம்

``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும்" எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``ஸ்டெர்லைட் ஆலையை மூட, கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால், டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின்மூலம் ஆலைத் தரப்பு உத்தரவுபெற்று ஆலையை இயக்கத் தொடங்கியது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி, ஆலையை இயக்குவதற்கான அனுமதியை ரத்துசெய்துள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கான சட்ட ரீதியான பணிகளை அரசு செய்யும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி இல்லை.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு துயரச் சம்பவம் நெஞ்சை உருக்குகிறது. இதில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் உடல்நலம்பெற்றுவருகிறார்கள். தூத்துக்குடியில் அமைதி திரும்பி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றனர்" என்றார். முன்னதாக, "துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?" என செய்தியாளர்கள் பலமுறை கேட்டும் காதில் விழாதது போலவே, பதில் அளிக்காமல் நழுவிச்சென்றார். அதன்பின், கலெக்டர் அலுவலகத்துச் சென்ற ஓ.பி.எஸ், அங்கு கலவரத்தில் சேதமடைந்த வாகனங்களைப் பார்வையிட்டார். பிறகு, விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நேற்று, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு காயம் அடைந்தவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் சரியாகப் பேசாததால் பாதியிலேயே கிளம்பிச்சென்றார். இது, மீடியாக்களில் வைரலானது. இன்றும் அதுபோல, அதிருப்தியில் யாரும் பேசிவிடக் கூடாது என்பதற்காகவும், இச்செய்தி மீடியாக்களில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவும் மீடியாக்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. கட்சிக்காரர்களும் வாசலிலேயே நிறுத்திவைக்கப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!