வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (28/05/2018)

கடைசி தொடர்பு:14:45 (28/05/2018)

``கொஞ்சம் பொறுத்துக்க மாப்ள... ஆஸ்பத்திரி போயிரலாம்!” - தூத்துக்குடி குடும்பத்தை மீட்ட நட்பு

கீழே விழுந்த சுகுமார் விஜய்யிடம் ``என்னை சுட்டுட்டாங்க... தொடைல ரத்தம் வருது நடக்க முடியலடா" எனக் கத்துகிறார். நண்பன் சுடப்பட்டதை உணர்ந்த விஜய் சுகுமாரை தூக்கிக்கொண்டு மீண்டும் திருநெல்வேலி சாலையில் ஓடுகிறார்.

``கொஞ்சம் பொறுத்துக்க மாப்ள... ஆஸ்பத்திரி போயிரலாம்!” - தூத்துக்குடி குடும்பத்தை மீட்ட நட்பு

எவ்வளவோ கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன், எவ்வளவோ பயணங்கள்...  எவ்வளவோ கதைகள், எவ்வளவோ காயங்கள், எவ்வளவோ நம்பிக்கைகள்...  எவ்வளவோ மனிதர்களையெல்லாம்  சந்தித்து திரும்பியிருக்கிறேன். ஆனால், தூத்துக்குடி முற்றிலும் வேறொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இறப்பு, இழப்பு, வலி, காயம், தழும்பு என அவ்வளவு உணர்வுகளையும் கடந்து தூத்துக்குடி  மீண்டு வரும்....

தூத்துக்குடிக்குப் பக்கத்தில் இருக்கிறது கூட்டப்புளி கிராமம். அந்தக் கிராமத்தில் இருக்கிற குடும்பத்தில் அப்பா அம்மாவோடு சேர்த்து எட்டு பேர். நான்கு ஆண் குழந்தைகள். இரண்டு பெண் குழந்தைகள். ஆறு பேருமே  பள்ளிக்குப் போகிறார்கள். அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். அப்பா கூலி வேலை. சில வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. ஒரு வாரத்தில் அப்பாவின் உடல் பழைய நிலைக்குத் திரும்பி விடுமென மொத்த குடும்பமும் நம்புகிறது. நினைப்பதெல்லாம் சாதாரண மக்களுக்கு நடந்துவிடுமா? அப்பா படுத்த படுக்கையாகிவிடுகிறார். மொத்த குடும்பமும் நிலை குலைந்து போகிறது. ஆறு குழந்தைகளும் படிக்க வேண்டும். அம்மா ஒருவரால் குடும்பத்தின் பாரத்தைச் சுமக்க முடியாது என்பதால், குடும்பத்தில் மூத்த மகன் என்கிற முறையில் 16 வயது சுகுமார் குடும்ப பாரத்தை சுமக்க முன்வருகிறார். மற்றவர்கள் படிக்க வேண்டும்; குடும்பத்தை நிமிர்த்த வேண்டும் என்கிற கனவில் பெங்களூரில் இருக்கிற கடலை மிட்டாய் நிறுவனத்துக்கு வேலைக்குக் கிளம்புகிறார். மாதம் 12 ஆயிரம் சம்பளத்தில் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். 

தூத்துக்குடி  சுகுமார் குடும்பம்

அடுத்த ஒரு வருடத்தில் மூத்த தங்கை பருவமடைகிறார். தேவைகள் அதிகரிக்கிறது. ஓடி ஓடி உழைக்கிறார். அப்பாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட்டப்பள்ளிக்கே திரும்பி வந்து கொத்தனார் வேலைக்குச் செல்கிறார். குடும்பச் சூழலை அறிந்துகொண்ட இன்னொரு மகன் படிப்பை எட்டாவதோடு நிறுத்திவிட்டு பெங்களூரில் சுகுமார்  பணிபுரிந்த மிட்டாய் நிறுவனத்துக்கு வேலைக்குச்  செல்கிறார். இதற்கு இடையில் பருவமடைந்த தங்கையின் சடங்கு நிகழ்வை நடத்த வேண்டும் என்பதால் பருவமடைந்த ஒன்றரை வருடங்கள் கழித்து சீர் செய்வது என முடிவெடுத்து அந்த வேலைகளைத் தொடங்குகிறார். பல இடங்களிலும் வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தில் சீர் நிகழ்வுக்கான அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார். அவரோடு அவருடைய இரண்டு நண்பர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். 

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழைச் சென்னை உட்பட பல ஊர்களிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு கடந்த திங்கள் கிழமை கூட்டாம்புளி ஊருக்குத் திரும்புகிறார். அடுத்த நாள் காலை அவர் பணிபுரிந்த மடத்தூரிலிருந்து ``இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வந்து வேலை பாத்துட்டு போங்க” என அழைப்பு வருகிறது. வேறு வழியின்றி அன்றைய தினம் காலை நண்பன் விஜய்யை அழைத்துக் கொண்டு பைக்கில் மடத்தூர் செல்கிறார். அந்தோனியார் புரத்தில் சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு நண்பர்கள் இருவரும் பைபாஸ் சாலையில் தூத்துக்குடி நோக்கி நடந்து செல்கிறார்கள். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் தாண்டி இருக்கிற பாலத்துக்கு அருகில் வரும்பொழுது மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வரை எந்தக் கலவரமோ துப்பாக்கிச் சூடோ நடக்கவில்லை. நண்பர்கள் இருவரும் மடத்தூர் செல்ல வேண்டாம்; மீண்டும் கூட்டப்புளிக்கே திரும்பிவிடலாம் என மக்களோடு சேர்ந்து நடக்கிறார்கள். 

அப்போது போராடும் மக்களும் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்துவிடுகிறார்கள். போராடுகிற மக்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். நண்பர்கள் இருவரும் திருநெல்வேலி சாலையில் ஓட ஆரம்பிக்கிறார்கள். சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதால் இனி எதுவும் நடக்காது என்கிற எண்ணத்தில் ஓடுவதை விட்டு விட்டு நடக்க ஆரம்பிக்கிறார்கள்.  இந்த நேரத்தில் இவர்களுக்குப் பின் பக்கமிருந்து வந்த காவலர்களைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இனி துப்பாக்கிச் சூடு இருக்காது என்கிற நம்பிக்கையில் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். அதற்குள் பின்னால்  இருந்து வந்த காவலர்கள் 500 மீட்டர் தூரத்திலிருந்து இவர்களை நோக்கிச் சுடுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் சுகுமார் சிக்கிக்கொள்கிறார். குண்டு பட்டதில் கீழே விழுந்த சுகுமார் விஜய்யிடம் 'என்னை சுட்டுட்டாங்க... தொடைல ரத்தம் வருது... நடக்க முடியலடா' எனக் கத்துகிறார். நண்பன் சுடப்பட்டதை உணர்ந்த விஜய் சுகுமாரைத் தூக்கிக்கொண்டு மீண்டும் திருநெல்வேலி சாலையில் ஓடுகிறார். மருத்துவமனைக்குப் போக முடியாதபடி தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடக்கிறது. பக்கத்திலிருக்கும் நல்லதம்பி மருத்துவமனைக்குப் போக வேண்டுமானால் போராட்டக் களத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், காவல்துறை சரமாரியாகத் தாக்குகிறார்கள். வேறு வழியின்றி திருநெல்வேலி சாலையில் நண்பனை தூக்கிக் கொண்டு போகிறார். 

சர்விஸ் சாலையில் வந்த ஒரு பைக்கை நிறுத்தி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென விஜய் மன்றாடுகிறார். பெயர் தெரியாதவரின் பைக்கில் ஏறி கொரம்பள்ளம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். ``மருத்துவமனையில் யாரும் இருக்க மாட்டாங்க... நீங்க உடனே புதுக்கோட்டை கொண்டு போங்க... என்னோட வண்டில பெட்ரோல் இல்ல" என லிஃப்ட் கொடுத்தவர் சொல்கிறார். அந்த வழியாக வந்த வேறொரு நண்பர் இருவரையும் பைக்கில் அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு வருகிறார். சுகுமார் வலியில் கத்துகிறார். ``இன்னும் கொஞ்ச நேரம்டா மாப்ள.. ஆஸ்பத்திரி போயிரலாம்.. கொஞ்சம்  பொறுத்துக்க மாப்ள“ என விஜய் ஆறுதல் சொல்கிறார். ஆனால், மருத்துவமனையில் ரத்தம் இல்லையென்பதாலும் மருத்துவ உபகரணங்கள் இல்லையென்பதாலும் உடனடியாக சுகுமாரை திருநெல்வேலி கொண்டு போகச் சொல்கிறார்கள். அவர்களுடைய இன்னொரு நண்பரான ராஜ்குமாருக்குத் தகவல் கொடுக்கிறார்கள். அவரும் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு வந்துவிடுகிறார். அங்கிருந்து 108 ஆம்புலன்சில் சுகுமார் திருநெல்வேலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். பயணத்தில் இருக்கும்பொழுதே சுகுமாரின் குடும்பத்துக்குத் தகவல் சொல்கிறார்கள். குடும்பத்தைச் சுமக்கிற சுகுமாருக்குக் குண்டு பட்டுவிட்டது என்றதும் குடும்பமே பதறிப் போகிறது. அம்மாவும் அப்பாவும் குழந்தைகளைவிட்டு விட்டு மருத்துவமனைக்குப் போகிறார்கள். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து சுகுமாரின்  குண்டு வெளியே எடுக்கப்படுகிறது. சுகுமாரிடம் பேசுகிற அவரது அம்மா ``விசேஷத்தை இன்னொரு நாள் வச்சுக்கலாம், நீ சரியாகி பத்திரமா வீட்டுக்கு வா"  என்கிறார். 

சுகுமார்

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு, இணைய வசதிகள் இல்லை. தங்கையின் சீருக்காக ஊருக்கெல்லாம் பத்திரிகை கொடுக்கப்பட்டுவிட்டது, கடன் வாங்கி எல்லாப் பணிகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்கள். சுகுமார் மருத்துவமனையில் இருக்கிறார்,  இப்போது குடும்ப நிகழ்வை நடத்துவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் மொத்த குடும்பமும் என்ன செய்வதென தெரியாமல் நிற்கிறார்கள். ஆனால், சுகுமாரின் நண்பர்கள் ``தங்கச்சிக்குச் சீர் நடக்கும், நாங்க பக்கத்துல இருந்து நடத்தி முடிக்கிறோம். நீ பத்திரமா ஆஸ்பத்திரியில் இரு” என  நம்பிக்கை கொடுக்கிறார்கள். சுகுமார் மருத்துவமனையில் இருக்கிறார். சுகுமாரை அவரது நண்பர் விஜய் சம்பவம் நடந்த நாளிலிருந்து இப்போது வரை உடனிருந்து கவனித்து வருகிறார். சுகுமார் குடும்ப நிகழ்வை அவரது நண்பர்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள். ஞாயிறு காலை 11 மணிக்குதான் சுகுமாரின்  தங்கைக்கு சீர் நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது…..

இந்த நிகழ்வு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை தூத்துக்குடி மக்கள் மிகப் பெரிய துயரத்துக்குப் பின்னால் நின்று நடத்தியிருக்கிறார்கள். 

தூத்துக்குடி மீண்டு வரும்! மீண்டும் வரும்.


டிரெண்டிங் @ விகடன்