வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (28/05/2018)

கடைசி தொடர்பு:14:30 (28/05/2018)

`தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்' - ரஜினியைச் சந்தித்த செ.கு.தமிழரசன் பேட்டி

''நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படங்களின் கதைகளை மக்களுக்காக மாறியுள்ளார்'' என செ.கு தமிழரசன் தெரிவித்துள்ளார். 

செ.கு தமிழரசன்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரை இன்று சந்தித்தார், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன். இவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசன், “மரியாதை நிமித்தமாகவே நான் ரஜினிகாந்த்தை சந்திக்க வந்தேன். தி.மு.க-வில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் வேறு கட்சி தொடங்கியபோதும், ஜெயலலிதா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றபோதும் நாங்கள் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளோம் அதேபோல புதிதாக அரசியலில் இறங்கியுள்ள ரஜினிகாந்த்தையும் சந்தித்துப் பேசினேன். இது எங்களின் மரபு. 

ரஜினி, அரசியல் ஆர்வம் உடையவர். தனக்கு புகழ் தேடித்தந்த, தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு அவருக்கு அதிகமாக உள்ளது. விரைவில் கட்சி தொடங்குவேன் என்று கூறியுள்ளார்; அதற்கான பணிகளைச் செய்துவருகிறார். உங்களுடன் சேர்ந்து நானும் அவரின் கட்சி அறிவிப்புக்காகக் காத்திருக்கிறேன். அவர், தமிழக வளர்ச்சிக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ரஜினி, தான் நடிக்கும் படங்களின் கதைகளை மக்களுக்காக மாற்றி நடித்துவருகிறார். இதேபோன்று, மக்கள் சார்ந்த திரைப்படங்களை எடுத்து, அவர்கள் மத்தியில் பெரிய பெயர் பெற்றார் எம்.ஜி.ஆர் . ரஜினிக்கு மக்களின் செல்வாக்கு உண்டு” என்றார்.