`தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா?’ - நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பெண்ணிடம் நெகிழ்ந்த மோடி

இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டப் பயனாளிகளுடன், நமோ ஆப் மூலமாக இன்று உரையாடினார், பிரதமர் மோடி. அப்போது, `தமிழகம் வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா?' என கிருஷ்ணகிரி பெண்களிடம் கேட்டார். 

மோடி

கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க `பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டத்தைக் கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டத்துக்காக ரூபாய் எட்டாயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்மூலம், லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரம்மாவிடம் `வணக்கம்' என்று கூறி பிரதமர் பேசத் தொடங்கினார். அவரிடம், ``காஸ் மானியம் திட்டத்தினால் பயன் அடைந்தீர்களா?'' எனக் கேட்டார்.  அதற்குப் பதிலளித்த ருத்ரம்மா, ``இத்தனை ஆண்டுகளாக விறகு அடுப்பில் சமைத்துவந்தோம். விறகு அடுப்பில் சமைக்க மிகவும் கஷ்டமாக இருந்தது'' என்றார். '` அப்படியா...?'' என்று ஆச்சர்யமாகக் கேட்ட மோடி, ``இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சமைக்க சிரமமாக இருந்ததா?'' என்றார். 

இதற்குப் பதிலளித்த ருத்ரம்மா, ``ஆமாம், விறகு அடுப்பில் சமைக்க கஷ்டப்பட்டோம். இலவச காஸ் இணைப்பு வழங்கியதால் உணவுகளைச் சமைக்க சுலபமாக இருக்கிறது'' என்றார். அப்போது, ``தமிழகம் வந்தால் எனக்கு தோசை சுட்டுத் தருவீர்களா?'' எனக் கேட்டதற்கு, `` நிச்சயமாகத் தருவேன்'' என்றார். முன்னதாக, பிற மாநில மக்களிடம் 20 நிமிடங்கள் வரை உரையாற்றிய மோடி, மொழிப் பிரச்னை காரணமாக ருத்ரம்மாவிடம் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!