வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (28/05/2018)

கடைசி தொடர்பு:14:55 (28/05/2018)

பத்திரிகையாளர்களை ஒருமையில் திட்டி ட்வீட்! கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி

பத்திரிகையாளர்களை ஒருமையில் திட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்த அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி ஹரிபிரபாகரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஹரிபிரபாகரன்

காஞ்சிபுரம் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளராக இருப்பவர், ஹரிபிரபாகரன். இவர், அவ்வப்போது கட்சி தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துவருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை ஒருமையில் திட்டி ட்விட்டரில் பதிவுசெய்திருந்தார். இதற்குப் பத்திரிகையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழவே, அவரை தற்போது ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்ட காரணத்தால், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரபாகரன், அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர்கள்குறித்து அவதூறாகக் கருத்துப் பகிர்ந்த எஸ்.வி சேகருக்குப் பலத்த கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க