நாளை தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க திட்டம்!

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

பன்வாரிலால் புரோஹித்

கடந்த 22ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தூத்துக்குடியில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அங்குப் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அங்கு தற்போது இயல்புநிலை திரும்பிவருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் சந்தித்த நிலையில் 5 நாள்களுக்குப் பிறகே அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர் மருத்துவமனையிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதன்பின்னர் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவரிடம் ``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?" எனச் செய்தியாளர்கள் பலமுறை கேட்டும் காதில் விழாதது போலவே, பதில் அளிக்காமல் நழுவிச்சென்றார். முன்னதாக மருத்துவமனைக்குள் ஓ.பி.எஸ் செல்லும்போது பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்தச் சூழலில்தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்லவிருக்கிறார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அவர் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி சென்று நேரில் விசாரிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!