வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (28/05/2018)

கடைசி தொடர்பு:16:22 (28/05/2018)

மத்திய அரசின் பிடியில் தமிழ்நாடு வாரியம்... அதிர வைக்கும் பின்னணித் தகவல்கள்!

தமிழக நலனுக்கு எதிரான இந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெறுவது குறித்து, தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர்கபிலிடம் பேசினோம், இதில் உள்ள ஆபத்தைச் சொன்னோம், கேட்டுக் கொண்டார். முதல்வரைச் சந்திக்க முயன்றோம், முடியவில்லை. முதல்வருக்காகக் காத்திருந்த வேளையில் ஆளுநரையும் சந்திக்க முயற்சி எடுத்தோம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனே அப்பாய்ன்மென்ட் கொடுத்து எங்களை வரச் சொன்னார். அவரையும் போய்ப் பார்த்தோம். நாங்கள் சொன்னதைக் கேட்டு அவருக்கு ஷாக்...  `நானும் தொழிற்சங்கத் தலைவராக இருந்திருக்கிறேன், நீங்கள் சொல்வதில் மறைந்திருக்கும்  ஆபத்து நன்றாகப் புரிகிறது. ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்தான். பிரதமரிடம் இது பற்றிப்  பேசுகிறேன்' என்று உறுதி கொடுத்து அனுப்பி வைத்தார்

                       வாரியம் குறித்து ஆளுநருடன் சேம.நாராயணன், கீதா உள்ளிட்டோர் மனு

வாரியம் என்ற வார்த்தையையும், மத்திய அரசுதான் பயன்படுத்த முடியும் போலிருக்கிறது. `அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு இனி, பா.ஜ.க.வே, நேரடியாக வாரியத் தலைவர்களை நியமிக்க உள்ளது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு ஆளுங்கட்சியோடு சேர்ந்து, அனைத்துக் கட்சிகளும் மௌனம் காக்கின்றன' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் மு.பன்னீர் செல்வம், ``இந்திய அளவில் கேரளா, அடுத்து தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தாம் முதன் முதலில் இந்த வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. வாரியத்தின் நோக்கம், தொழிலாளிகளைக் காப்பது, கைதூக்கி விடுவது என்பதுதாம். 38 வகையான தொழில்களை உள்ளடக்கிய தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 60 வகையான தொழில்களை உள்ளடக்கிய 15 நல வாரியங்கள், 60 வகையான அமைப்புச் சாரா தொழில்களை உள்ளடக்கிய வாரியங்கள் மேலும் 17 நல வாரியங்கள் எனத் தமிழ்நாட்டில் தொழிலாளிகளுக்குத் தொழில் பாதுகாப்பும், குடும்பப் பாதுகாப்புமாக இந்த வாரியங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் இருக்கிறது. புதிய  கட்டடங்களுக்கு, சி.எம்.டி.ஏ., `பிளான் அப்ரூவல்' வழங்கும் போதே, கட்டடத்தின் மொத்த மதிப்பில் ஒரு சதவிகிதத்தைக் கட்டட உரிமையாளர்கள் சேவை வரியாகச் செலுத்தும் தொகைதான் வாரியத்தில் சேர்கிறது. இந்தத் தொகை, தமிழக அரசின் வெல்ஃபேர் பண்டில் சேர்ந்து இன்று 2 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து நிற்கிறது.

கட்டடத் தொழிலாளிகள் குடும்பத்தில் கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்தால் மரணம் போன்றவற்றுக்கு இந்த நிதியின் மூலமே, தொழிலாளிகளுக்குப் பண உதவி செய்யப்படுகிறது.  நல வாரியங்களை மத்தியத் தொகுப்பில் கொண்டு வர இப்போது மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இப்போது கிடைத்துக்கொண்டிருக்கும் நலத்திட்ட உதவிகளைக், கெடுக்கப் பார்க்கும் வேலைதான் இது. தமிழகத்தில் இருக்கிற, வாரியத்தின் நிதியான 2 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களின் கண்களை உறுத்துகிறது. மத்திய அரசிடம் ஏற்கெனவே உள்ள 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் தொகையை, எதற்கும் செலவிடாமலே பத்திரமாக வைத்திருக்கிறார்கள். மத்திய அரசிலிருந்து, ஈ.எஸ்.ஐ., பிராவிடென்ட் ஃபண்டு போன்ற திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வந்தால், தொழிலாளிகளுக்குப் பயன் இருக்கிறது. மாநிலத்தில் இருக்கும் நிதியை இப்படி, மத்தியத் தொகுப்புக்குக் கொண்டு போவதால் தொழிலாளிகளுக்கு ஒரு பயனும் இல்லை, எல்லாப் பயனும் மத்திய அரசுக்குத்தான் கிடைக்கும்" என்றார்.


சேம.நாராயணன்மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தின் முன்னாள் தலைவர் சேம.நாராயணன், ``அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியம் என்பது அந்தந்த மாநிலத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த விஷயமாகத்தான் இதுவரைக்கும் இருந்தது. இனி அப்படி முடியுமா என்று தெரியவில்லை. `மத்திய சமூகப் பாதுகாப்பு வரைவுச் சட்டம் 111' என்பதின் கீழ், இந்த வாரியங்கள் அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு மாற்றப்பட்டிருக்கின்றன, அதற்கான மசோதா பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. முதலில், மாநிலங்களுக்குப் பாராளுமன்றக் குழுவை அனுப்பி, அதன்பின் ஸ்டேண்டிங் கமிட்டியினர், அந்தந்த மாநிலங்களில் ஆய்வு செய்து, அதை மாநில விவாதத்துக்கு விடுவார்கள். அது முடிந்த பின், பாராளுமன்றத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான், செயல்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும். இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை. நேரடியாகவே, `மத்திய சமூகப் பாதுகாப்பு வரைவுச் சட்டம் 111-ன் கீழ் இச்சட்டம் அமலாகிறது' என்று பாராளு மன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்து, தமிழகத்தின் கதையை முடித்து விட்டார்கள்.  
 கேரளாவில் அனைத்துக் கட்சிகளும் இதைக் கண்டித்து, போராட்டம் நடத்தின, தமிழ்நாட்டில் இதுகுறித்து எந்தச் சத்தமும் வரவில்லை. மாநிலங்களில் உள்ள வாரியங்களை மத்தியஅரசு, இனி எளிதாகக் கைப்பற்றலாம் எந்தத் தடையும் இல்லை. ஏற்கெனவே இங்கு செயல்பாட்டில் உள்ள தொழிலாளர் நல-பாதுகாப்புச் சலுகைகள் எப்படி இருக்க வேண்டும், எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள்தாம் தீர்மானிக்க முடியும், அதேபோல், வாரியத் தலைவர்களாக மத்திய பா.ஜ.க., அரசு யாரை நினைக்கிறதோ அவர்களை நியமிக்க முடியும்.

மத்தியத் தொகுப்புக்கு மாநில நல வாரியங்கள் போனபின்னர் அவர்கள் சொல்வதுதான் வருங்காலங்களில் சட்டமாக இருக்கும். தமிழக நலனுக்கு எதிரான இந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெறுவது குறித்து, தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர்கபிலிடம் பேசினோம், இதில் உள்ள ஆபத்தைச் சொன்னோம், கேட்டுக் கொண்டார். முதல்வரைச் சந்திக்க முயன்றோம், முடியவில்லை. முதல்வருக்காகக் காத்திருந்த வேளையில் ஆளுநரையும் சந்திக்க முயற்சி எடுத்தோம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனே அப்பாய்ன்மென்ட் கொடுத்து எங்களை வரச் சொன்னார். அவரையும் போய்ப் பார்த்தோம். நாங்கள் சொன்னதைக் கேட்டு அவருக்கு ஷாக்... `நானும் தொழிற்சங்கத் தலைவராக இருந்திருக்கிறேன், நீங்கள் சொல்வதில் மறைந்திருக்கும் ஆபத்து நன்றாகப் புரிகிறது. ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான். பிரதமரிடம் இது பற்றிப் பேசுகிறேன்' என்று உறுதி கொடுத்து அனுப்பி வைத்தார். இதுவரையிலும் ஒன்றும் நடக்கவில்லை அமைப்பு சாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவாக, கோட்டையை முற்றுகையிட்டுப்  போராட்டம் நடத்தப் போகிறோம். தமிழகச் சட்டமன்றம் கூடும் முதல் நாளில் ஆயிரக்கணக்கில் ஆண்-பெண் தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் " என்கிறார், சேம.நாராயணன். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபில் கருத்தறிய முயன்றோம், தொலைபேசியில் அழைத்தோம், குறுஞ்செய்தி மூலமும் தகவலை அனுப்பினோம்... பதில் கிடைக்கவில்லை.


சௌந்தரராஜன், சி.பி.எம்.மூத்தத் தொழிற்சங்கவாதியும், சி.ஐ.டி.யு.செயலாளருமான ஏ.சௌந்தரராஜன், ``மாநிலம், மத்திய அரசு என்று மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணம் நலவாரிய சேமிப்பில் இருக்கிறது. அந்தப் பணத்தை வழிநடத்தக்கூடிய ஏற்பாட்டை பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப்பில் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. `பலன் என்னவோ அதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், பணத்தை நீங்கள் வைத்து அனுபவித்துக்கொண்டிருங்கள்' என்று பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப்புக்குச் சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் சேமிப்புத் தொகையை அவர்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சோஷியல் வெல்ஃபேர் டிபார்ட்மென்ட்டும், லேபர் டிபார்ட்மென்ட்டும்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. பற்றாக்குறை வந்தால் அரசே, மானியத்தின் கீழ் அதற்குத் தீர்வு காண வேண்டும். ஈ.எஸ்.ஐ.,  பி.எஃப்., போன்ற நலத் திட்டங்களை ஒரே கோட்டின் கீழ் கொண்டு வந்து அனைத்தையும் தனியார் கைகளில் ஒப்படைக்கும் வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளது. தனியாரும் மகிழ்ச்சியாகப் பணத்தை வாங்கிக் கொண்டு, `லோன்' திட்டக் கணக்கில், அதைப் பயன்படுத்துவதாகக் கணக்குக் காட்டுவார்கள். ஒரு கட்டத்தில், மொத்தப் பணமும் திவால் என்று ஓடிப்போனால் பணத்துக்கு யார் பொறுப்பு? புகார், வழக்கு என்று அதன்பின்னால் திரிய வேண்டியதுதான். மத்திய அரசின் இந்தத் திட்டத்தை, சி.பி.எம்., கடுமையாக எதிர்க்கிறது, மத்தியத் தொழிற்சங்கம் இதைக் கண்டித்துத் தொடர்ந்து போராடியும் வருகிறது. கடந்த மாதம் கூட பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்