வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (28/05/2018)

கடைசி தொடர்பு:16:30 (28/05/2018)

செய்தியாளர்களை விமர்சித்து ட்வீட் போட்ட ஹரி பிரபாகரன் நீக்கம்! - அ.தி.மு.க. நடவடிக்கை

அதிமுக

அதிமுக-வின் சார்பு அணிகளில் ஒன்றாகச் செயல்பட்டுவருவது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி. கட்சியின் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தாம், சமூக வலைதளங்களில் அ.தி.மு.க-வின் செயல்பாடுகள், கட்சி தொடர்பான செய்திகள் போன்றவற்றை பதிவிட்டு புரோமோட் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க-வின் ஐ.டி. அணியினருக்கு மாவட்டவாரியாகச் செயலாளர் உட்பட நிர்வாக அமைப்பும் உள்ளது. இந்தநிலையில் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்கச் சென்றார். அந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கும் திட்டமும் துணை முதல்வரின் பயணத்தில் இருந்தது. காயமடைந்தவர்களைச் சந்திக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கெனவே மருத்துவமனைக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்டவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆளும் தரப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், `தூத்துக்குடி மருத்துவமனைக்கு ஓ.பி.எஸ். வருகைதரும்போது செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது' என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்திருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஹரி பிரபாகரன் என்பவர், இன்றுகாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். ``பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் துணை முதல்வர் சந்திக்கச் செல்லும்போது செய்தியாளர்களுக்கு அனுமதியில்லை. அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை” என்று பதிவிட்டதுடன், செய்தியாளர்கள் அனைவரையும் அவமதிக்கும் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருந்தார். அவரின் அநாகரிகமான இந்த ட்விட்டர் கருத்துப் பெரும் சர்ச்சையையும், அ.தி.மு.க-வுக்குத் தலைவலியையும் ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தகவல்தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி வெளியிட்ட ட்விட்டர் கருத்து சில நிமிடங்களில் செய்தியாளர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியது. இதையடுத்து, அ.தி.மு.க நிர்வாகி ஹரி பிரபாகரனுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், மாநில அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராமச்சந்திரனுக்கு இந்த ட்விட்டரை அனுப்பிப் பலரும் விளக்கம் கேட்டிருந்தனர். அதன்பிறகு ராமச்சந்திரன், ``இது அ.தி.மு.க வின் தகவல் தொழில்நுட்ப அணியின் கருத்து அல்ல; தனிப்பட்ட முறையில் ஹரி பிரபாகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைத் தரக்குறைவாக நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருபோதும் செயல்பட்டதில்லை. இந்த அணியே ஆட்சியின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டதுதான். அந்தப் பணிகளை மட்டுமே நாங்கள் செய்துவருகிறோம். இதுபோன்று விமர்சனங்களை ஏற்படுத்துவதற்காக அல்ல. சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார். 

 

அதிமுக அறிக்கை

இந்த நிலையில் பல்வேறு செய்தியாளர்களும் அ.தி.மு,க தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, `ஹரி பிரபாகரன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?' என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனராம். இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, ``கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், ஹரி பிரபாகரனின் சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை நீக்க அறிவுறுத்தியுள்ளனர். ஹரிபிரபாகரிடம் விசாரித்தேன். 'தூத்துக்குடி விவகாரத்துக்குப் பிறகு கட்சியின் தலைமைகளான ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்தும், மீம்ஸ் மூலமாகவும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். இதனால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். பிறகு பொறுமையிழந்து தவறான முறையில் ட்வீட் செய்துவிட்டேன்' என வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு, கட்சித் தலைமை ஹரி மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. எங்களது நோக்கமே வேறு. அமெரிக்காவில் சமூக வலைதளப் பிரசாரங்களை முன்னெடுத்து ஒபாமா ஆட்சியைக் கைப்பற்றியதுபோல நாங்கள் இங்கு அ.தி.மு.கவின் நல்ல திட்டங்களையும், நல்ல நோக்கங்களையும் மக்களிடம் கொண்டுசேர்க்க முயன்று வருகிறோம்." என்றார்.

``ஹரிபிரபாகர் மட்டுமல்லாமல் கட்சியைச் சேர்ந்த வேறு சில ஐ.டி விங் உறுப்பினர்களின் அக்கவுன்ட்களில் இருந்தும் இதுமாதிரியான தகாத கருத்துகள் வெளிவருகிறதே கவனிக்கிறீர்களா?" என்றோம், ``எனக்குத் தெரிந்து அப்படி யாரும் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவிப்பதில்லையே. அதுமாதிரியான சர்ச்சை நபர்களின் ஐ.டிக்களை எனக்கு அனுப்பி வையுங்கள். பார்க்கிறேன்", என முடித்துக்கொண்டார்.

 தன்னுடைய ட்விட்டர் பதிவு, சர்ச்சையை ஏற்படுத்தியதால் அடுத்ததாக மற்றொரு பதிவை வெளியிட்டார் ஹரி பிரபாகரன். அதில், ``ட்விட்டரில் பதிவிட்டது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அது அ.தி.மு.க-வின் கருத்து அல்ல; என்னுடைய ட்விட்டர் பதிவால், பலருடைய மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறேன். நான் எந்த உள்நோக்கத்தோடும் அந்தக் கருத்தைப் பதிவிடவில்லை. என் பதிவுக்காக நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

அதிமுக

இந்த நிலையில், செய்தியாளர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்ட  ஹரி பிரபாகரனை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது. செய்தியாளர்கள் குறித்து காலையில் ட்வீட் பதிவிட்ட அ.தி.மு.க நிர்வாகியின் பதவி மதியத்துக்குள் காலியானது குறிப்பிடத்தக்கது.  

`அ.தி.மு.க-வில் பொறுப்பில் இருப்போர் இதுபோன்ற அநாகரிகமான வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது' என்று அ.தி.மு.க தலைமையிடமிருந்து விரைவில் அறிவிப்பும் வர உள்ளதாம். சமூக வலைதளங்களை வைத்துக்கொண்டு, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இனி நடைபெறக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பிக்க உள்ளது அ.தி.மு,க தலைமை.


டிரெண்டிங் @ விகடன்