தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? - எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்வி கடந்த 6 நாள்களாக நிலவி வந்த நிலையில், தற்போது 2 தனி வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடையே கடந்த 6 நாள்களாக எழுந்த நிலையில், தனி துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் தனி மண்டல வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகரன் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர் சுருக்கம், “தனித் துணை வட்டாட்சியர் சேகர், தூத்துக்குடி நகரம், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும், அதனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் எனவும் முடிவு செய்து இந்தக் கிராம மக்கள் மக்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தது.

இதைக் கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது. தடையையும் மீறி, இந்தக் கிராம மக்கள் மட்டுமின்றி மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர்கள் தடுப்புகளையும் மீறி வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டே ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறி வந்துகொண்டே இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடாத கலெக்டர் ஆபீஸையும் ஆபீஸுக்குள் இருப்பவர்களையும் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டே ஆட்சியர் அலுவகத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசியபடியே நுழைய முயன்றனர். அப்போது ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லியும் ஒலிபெருக்கியில் அறிவித்தும், கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைக்க உத்தரவிட்டேன். மேலும், கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்தப்படும் என அறிவித்தும் கலவரம் மூண்டது. இனியும் பொறுமையாக இருந்தால் ஆட்சியர் அலுலகத்துக்கும் அரசு சொத்துகளுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என்பதால் கலவரக்காரர்களைத் துப்பாக்கி பிரயோகித்து கலைக்க உத்தரவிட்டேன். அதன் பின்னர், வன்முறைக் கும்பலைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின்படி 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், திரேஸ்புரத்தில் நடந்த வன்முறை குறித்து மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார்.  அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது மண்டல கலால் அலுவலர் சந்திரன் என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!