மோசடி வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜஸ்தான் பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ!

போலி நிதி நிறுவனம் நடத்தி தமிழக மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ராஜஸ்தான் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சோபாராணி குஷ்வா மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். 

பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் பெண் எம்எல்ஏ

மதுரை, விருதுநகர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2016-ம் ஆண்டில் கரிஷ்மா அக்ரோடெக் என்கிற பெயரில் போலி நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த பணத்துக்கு நிலம் தருவதாக ஏமாற்றி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்தப் போலி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்ததாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் மீதும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சோபாராணி குஷ்வா, இந்த வழக்கில் 6 வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகாமல் இருந்த சோபா ராணிக்கு மதுரை பொருளாதார குற்ற நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பாக அவர் இன்று சரணடைந்தார். இரண்டு லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டதை அடுத்து, சோபாராணி குஷ்வா பிணையில் விடுவிக்கப்பட்டார், வழக்கு விசாரணை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மோசடி வழக்கில் ராஜஸ்தான் பி.ஜே.பி எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!