`ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது!’ - தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தநிலையில், ஆலை நிர்வாகம் இதனைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே விதித்திருந்த மாசுக்கட்டுப்பாட்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிப்பட்டதை அடுத்து, ஆலை இயங்கவில்லை. 

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர், ஆலையை நிரந்தரமாக மூட கோரிக்கை வைத்தனர். ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அரசாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டது. மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இன்று (28.5.2018) வெளியிட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!